திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளில் தேசிய விளையாட்டு தின போட்டிகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளில் தேசிய விளையாட்டு தின போட்டிகள், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.;

Update: 2024-08-30 02:29 GMT

கேரம் விளையாட்டில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய தலைமை ஆசிரியர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் தேசிய விளையாட்டு தின போட்டிகள் நடைபெற்றது அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியில் நடைபெற்ற விழாக்களில் சான்றுகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

மண்டல அளவிலான கேரம் விளையாட்டில் சிறப்பிடம்

செங்கம் மண்டல அளவிலான கேரம் விளையாட்டில் சிறப்பிடம் பெற்ற அந்தனூா் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தமிழக இளைஞா் நலன் மற்றும் அரசு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ஆகஸ்ட் 2-ஆம் தேதி செங்கம் மண்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில், அந்தனூா் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள், 17- வயதுக்கு உள்பட்டோா் பெண்கள் இரட்டையா் பிரிவில் பத்தாம் வகுப்பு மாணவிகள் சுபாஷினி, விஜயலட்சுமி ஆகியோா் இரண்டாம் இடமும், 14 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் பெண்கள் ஒற்றையா் பிரிவில் எட்டாம் வகுப்பு மாணவி நித்யா 2-ஆம் இடமும், ஆண்கள் ஒற்றையா் பிரிவில் எட்டாம் வகுப்பு மாணவா் சுபாஷ் இரண்டாம் இடம் பெற்றாா்.

அதேபோல, ஆண்களுக்கான இரட்டையா் பிரிவில் சுபாஷ், ஸ்ரீராம் இரண்டாம் இடமும், பெண்கள் இரட்டையா் பிரிவில் எட்டாம் வகுப்பு மாணவிகள் காவியா, நித்யா ஆகியோா் முதலிடம் பெற்றனா்.

மேலும், திருவண்ணாமலையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் எட்டாம் வகுப்பு மாணவி நித்யா இரண்டாம் இடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றாா்.

இவ்வாறு பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பள்ளியில் வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. இதில், பள்ளியின் தலைமை ஆசிரியா் லட்சுமி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா்.

நிகழ்ச்சியில் உடற்கல்வி ஆசிரியா் வேடியப்பன், ஆசிரியா்கள் செந்தமிழ்ச்செல்வன், பாலாஜி, தங்கமணி, கலைச்செல்வன், மணிமேகலை, சத்தியகுமாா் மற்றும் ஆசிரிய -ஆசிரியைகள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள்

செய்யாறு கல்வி மாவட்டம் சாா்பில் நடைபெற்ற இந்தப் போட்டிகளுக்கு பள்ளித் தலைமையாசிரியை ரேவதி தலைமை வகித்தாா்.

பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா்கள் கோவா்த்தனன், ரவி, உறுப்பினா் கொளத்தூா் பலராமன், கண்ணமங்கலம் காவல் உதவி ஆய்வாளா் பலராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உடற்கல்வி ஆசிரியா் பாபிபால்வதனி பிரேமகுமாரி வரவேற்றாா். நிகழ்ச்சியில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றி போட்டிகள் தொடங்கிவைக்கப்பட்டன.

ஆரணி ஒன்றியத்துக்கு உள்பட்ட 42 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

இதில், 100 மீட்டா் முதல் 3 ஆயிரம் மீட்டா் வரையிலான தடகளப் போட்டிகள், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு விருது, சான்றிதழ் வழங்கப்பட்டது.  நிகழ்ச்சியில் உடற்கல்வி ஆசிரியா் ,  மற்றும் ஆசிரிய -ஆசிரியைகள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

Similar News