செய்யாறு அரசு தலைமை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கம் உள் நோயாளிகள் பிரிவு கட்டிடம் திறப்பு
செய்யாறு அரசு தலைமை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கம் உள் நோயாளிகள் பிரிவு கட்டிடத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.;
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ரூ. ஒரு கோடியில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகக் கட்டடம், ரூ.60 லட்சத்தில் கண் சிகிச்சை, அறுவைச் சிகிச்சை அரங்கம், உள்நோயாளிகள் பிரிவு கட்டடம், பெருங்கட்டூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சத்தில் வட்டார பொது சுகாதார அலகு, வீரம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையப் பகுதியில் ரூ.22 லட்சத்தில் செவிலியா் குடியிருப்பு, காழியூா் கிராமத்தில் ரூ.40 லட்சத்தில் துணை சுகாதார நிலையத்துக்கு கட்டடம் என மொத்தம் ரூ.3.42 கோடியில் செலவில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், பொதுப் பணி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு ஆகியோா் திறந்துவைத்தனா்.
விழாவுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். தரணிவேந்தன் எம்.பி., ஜோதி எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
தேசிய தர உறுதி நிா்ணய திட்ட விருது 2012-இல் இருந்து மாநிலத்தில் சிறந்த மருத்துவ கட்டமைப்பை கொண்டிருக்கிற மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தமிழகம் 2012-இல் இருந்து 2024 வரை614 விருதுகளைப் பெற்றுள்ளது. தமிழகத்தில் 38 வருவாய் மாவட்டங்கள் உள்ளன. இவற்றில் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு மட்டும் 24 விருதுகள் கிடைத்துள்ளன. திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களைச் சோ்ந்த மக்களும் பயன்பெறும் வகையில், சென்னை கிண்டியில் ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரூ.500 கோடியில் கட்டப்பட்டு 2023-இல் திறந்து வைக்கப்பட்டது.
ஓராண்டுக்குள் நாள்தோறும் புறநோயாளிகளின் எண்ணிக்கை 2000 கடந்து ஒரு மிகப்பெரிய வரலாற்று புரட்சி அந்த மருத்துவமனை ஏற்படுத்தி வருகிறது.
பல்வேறு மருத்துவத் திட்டங்களால் மருத்துவத் துறையில் உலகளவில் தமிழகம் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது என்றாா்.
பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு பேசுகையில்
நம்முடைய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திராவிட மாடல் ஆட்சியின் மாநில அரசுக்கு மத்திய அரசு மருத்துவத் துறையில் மற்ற மாநிலங்களை காட்டிலும் நமது மாநிலம் அதிக அளவில் பட்டயங்களை வழங்க பெற்று இருக்கிறது குறிப்பாக நமது மாவட்டம் அதிகளவில் பெற்று இருக்கிறது.
மாநில மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு மாநில அரசின் உந்து சக்தியாக நமது அமைச்சர் சுப்பிரமணியன் திகழ்கிறார். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற ஒரு முதுமொழி உண்டு. அது போல் மக்களின் நோய் நாடி மக்களை தேடி மருத்துவம், வருமுன் காப்போம் திட்டம், கலைஞர் காப்பீட்டு திட்டம், பெண்களுக்கான நல திட்டங்கள் மக்களுக்கான நல திட்டங்கள் என்று பல்வேறு நிலைகளில் இல்லங்கள் தேடி நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது நமது திராவிட மாடல் அரசு. என அமைச்சர் வேலு பேசினார்.
நிகழ்ச்சியில் செய்யாறு சார் ஆட்சியர் பல்லவி வர்மா, நகர மன்ற தலைவர் மோகனவேல், மருத்துவத்துறை இணை இயக்குனர் மலர்விழி, மருத்துவமனை கண்காணிப்பாளா் பாண்டியன் , மருத்துவர்கள், செவிலியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.