உதயநிதி ஸ்டாலினை அவதூறாகப்பேசியதாக இந்து முன்னணி நிர்வாகிகள் கைது
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவதூறாக பேசியதாக இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ் மற்றும் நிர்வாகி கைது செய்யப்பட்டனர்.;
திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவதூறாக பேசியது தொடர்பாக இந்து முன்னணி மாநில செயலாளர் மற்றும் கோட்டத் தலைவர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் கடந்த 18-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான கூட்டம் ஆரணி அண்ணா சிலை அருகே மாவட்ட செயலாளர் தாமோதரன் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக இந்து முன்னணி வேலூர் கோட்ட தலைவர் கோ.மகேஷ் கலந்துகொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆரணி நகர தி.மு.க. செயலாளரும், நகரமன்ற தலைவருமான ஏ.சி.மணி ஆரணி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் நேற்று வேலூரில் உள்ள இந்து முன்னணி கோட்ட தலைவர் கோ.மகேஷ் வீட்டுக்கு சென்று அவரை கைது செய்தனர்.
இதையடுத்து சந்தவாசல் போலீஸ் நிலையத்துக்கு அவரை அழைத்து வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆரணி பகுதியில் உள்ள இந்து முன்னணி பொறுப்பாளர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் போலீஸ் நிலையத்தின் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். பின்னர் இந்து முன்னணி கோட்ட தலைவர் கோ.மகேசை ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
அப்போது நீதிபதி, மகேசை வருகிற 9- ஆம் தேதி வரை 14 நாட்கள் வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அவரை வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.
இதேபோல், செய்யாறில் கடந்த 22-ம் தேதி நடைபெற்ற விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை தொடங்கி வைத்து மாநில செயலாளர் மணலி மனோகர் பேசினார். அப்போது அவர், தமிழக அரசு மற்றும் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் மீது அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது
இது குறித்து நகர திமுக செயலாளர் விஸ்வநாதன் கொடுத்த புகாரின் பேரில், செய்யாறு காவல் துறையினர் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, சென்னை மணலியில் உள்ள வீட்டில் இருந்த மாநிலச் செயலாளர் மணலி மனோகரை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை, செய்யாறு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
வேலூர் கோட்டத் தலைவர் மகேஷ், மாநிலச் செயலாளர் மணலி மனோகர் ஆகியோரை கைது செய்துள்ள காவல் துறை மற்றும் தமிழக அரசை கண்டித்து திருவண்ணாமலை காந்தி சிலை அருகே மாவட்ட பொதுச்செயலாளர் அருண்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல், செய்யாறில் மாவட்டத் தலைவர் ஆறுமுகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.