புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் காவல் நிலையம் முற்றுகை
புகார் மீது நடவடிக்கை எடுக்காத பெரணமல்லூர் காவல் நிலையத்தை மலைவாழ் மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்
பெரணமல்லூரை அடுத்த மரக்கோணம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார், தனது மகள் திருமணத்துக்காக அதே கிராமத்தை சேர்ந்த கோவிந்தனிடம் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார்.
கோவிந்தன் கொடுத்த கடனை திருப்பி கேட்பதற்காக அய்யனாரின் வீட்டுக்கு சென்று அய்யனாரின் மனைவி வேண்டா, மகள் காவேரி ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டியது மட்டுமல்லாது, திடீரென காவேரியின் தலைமுடியை பிடித்து இழுத்து கீழே தள்ளியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பெரணமல்லூர் போலீசில் கடந்த வாரம் வேண்டா புகார் செய்தார். ஆனால் இதுநாள் வரையிலும் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் காவல்துறையினரை கண்டித்து, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலாளர் மாரியப்பன் தலைமையில் பெரணமல்லூர் காவல் நிலையத்தை மலைவாழ் மக்கள் முற்றுகையிட்டு திடீர் போராட்டம் நடத்தினர்.
மாலை 5 மணியளவில் தொடங்கிய முற்றுகை போராட்டம், காவல் நிலையத்தில் அதிகாரி இல்லாததால் இரவு 9 மணி வரை நீடித்தது. காவல் நிலையம் முன்பு மலைவாழ் மக்கள் வெகுநேரம் தரையில் அமர்ந்திருந்தனர்.
பின்னர் இன்ஸ்பெக்டர் நந்தினிதேவி வந்ததும், அவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தி, கோவிந்தன் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும், என உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் முற்றுைக போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.