செய்யாறு அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.;
பட்டமளிப்பு விழாவில் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணுபிரசாத் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கலைவாணி தலைமை வகித்தார். பேராசிரியர் கண்ணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஆரணி மக்களவைத் தொகுதி உறுப்பினர் விஷ்ணுபிரசாத் மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது போட்டி நிறைந்த உலகில் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டு சவால்களை எதிர்கொள்ள வேண்டும். பொது அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள், உங்களிடம் உள்ள தனித் திறமைகளை வெளிப்படுத்தி மற்றவர்களுடன் கலந்துரையாடுங்கள்.
இதன் மூலம் உங்களுக்கான நோக்கம் தெளிவுபெறும், எதிலும் முழுமையாக செயல்படுங்கள். தன் கைபேசியை அறிவு சார்ந்தவர்களுக்கும் வேலை வாய்ப்புகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும், மாணவர்களின் உயர்வும் ஒழுக்கமும் தான் பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் பெருமை தேடித்தரும் என்றார். நிகழ்ச்சியில் 1406 மாணவ மாணவிகள் பட்டங்கள் பெற்றனர். பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாணவர்களின் பெற்றோர் என பலர் கலந்து கொண்டனர்.