பட்டாசு வெடித்ததில் காயமடைந்த சிறுமி பலி
செய்யாறு அருகே பட்டாசு வெடித்ததில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே ராமகிருஷ்ணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தினகரன். இவரது மகள் கிருத்திகா வயது 9. நேற்று முன்தினம் மாலை வீட்டு வாசலில் அகல் விளக்கேற்றி எண்ணெயை ஊற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது தெருவில் பட்டாசு வெடித்து கொண்டிருந்ததால் திடீரென பட்டாசு சிதறி அகல் விளக்கில் விழுந்ததில் சிறுமிக்கு தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக சிறுமியை அருகில் உள்ள பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுமி கிருத்திகா சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் தனபால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.