சேத்துப்பட்டில் வரத சஞ்சீவி ராய பெருமாள் கருட சேவை விழா
சேத்துப்பட்டு ஸ்ரீ வரத சஞ்சீவி ராய பெருமாள் கோவிலில் வைகாசி கருட சேவை உற்சவ விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.;
சேத்துப்பட்டு காவல் நிலையம் அருகில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ வரத சஞ்சீவிராய பெருமாள் கோவிலில் வைகாசி மாத கருட சேவை உற்சவ விழா நேற்று காலை சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு ஸ்ரீ வரதர் சஞ்சீவி ராய பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி, ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு கோபுர தரிசனம் வழங்கினார்.
தொடர்ந்து கருட வாகனத்தில் எழுந்தருளி பஜனை குழுவினருடன் பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதில் சேத்துப்பட்டு ,பழம் பேட்டை, போளூர், கலசப்பாக்கம், வந்தவாசி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, வெங்கட்ரமணா நாராயணாயன, சரண கோஷங்களை எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர்.
கூழமந்தலில் நடைபெற்ற கருட சேவை
திருவண்ணாமலை மாவட்டம், கூழமந்தலில் நடைபெற்ற கருட சேவை பெருவிழாவில் செய்யாற்றில் உற்சவ மூா்த்திகள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
செய்யாறு தாலுகாவில் கூழமந்தலில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபேசும் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத்தன்று செய்யாற்றுப் பகுதியில் உள்ள 13 கிராமங்களில் இருந்து உற்சவ மூா்த்திகள் பங்கேற்பது வழக்கமாகும்.
அதன்படி, நிகழாண்டு வைகாசி விசாக கருட சேவை உற்சவம் வியாழக்கிழமை அதிகாலை கோலாகலமாக நடைபெற்றது.
இந்த கருட சேவை உற்சவத்தில் கூழமந்தல் ஸ்ரீ பேசும்பெருமாள், இளநீா் குன்றம் ஸ்ரீவைகுண்ட சீனிவாச பெருமாள், சேத்துப்பட்டு ஸ்ரீ கல்யாண வெங்கடேச பெருமாள், இளநகா் சீனிவாச பெருமாள், தேத்துறை சீனிவாச பெருமாள், பெண்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆகிய சுவாமிகள் கருட வாகனங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். அப்போது, சுவாமிகளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
விழாவில் கூழமந்தல், காஞ்சிபுரம் , பெருநகா், சேத்துப்பட்டு, பெண்ணை, போளூர், கலசப்பாக்கம், வந்தவாசி, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனா். திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.