காட்டன் சூதாட்டத்தை தடுக்க சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்

செய்யாறில் காட்டன் சூதாட்டத்தை தடுக்க சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது கொலை முயற்சியில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்

Update: 2021-09-16 07:42 GMT

செய்யாறு டவுன் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் காட்டன் சூதாட்டம் நடப்பதாக செய்யாறு போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் பாலு தலைமையில் போலீசார் செய்யாறு-ஆரணி சாலையில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆரணி கூட்ரோடு பஸ் நிறுத்தம் அருகில் வெங்கட்டராயன்பேட்டை பகுதியைச் சேர்ந்த சையத்காசிம் என்பவர் காட்டன் லாட்டரி ரிசல்ட் மாதிரி சீட்டுகளை காண்பித்து, சிலரிடம் ஆசைவார்த்தைகளை கூறி, காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, இருந்தவர்களை மடக்கி பிடித்தனர். அப்போது இன்ஸ்பெக்டரை தகாத வார்த்தைகளால் பேசி திட்டி அருகில் கிடந்த கட்டையை எடுத்துக் காட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். 

அதேபோல் காந்தி ரோடு பகுதியில் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட கீழ்புதுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்ற நபரை செய்யாறு போலீசார் மடக்கி பிடிக்க முயன்றபோது, அவரும் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்து கொலை முயற்சியில் ஈடுபட்டு தப்பியோட முயன்றார். இருவரையும் போலீசார் நீதிபதியின் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அதேபோல் மோரணம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெருங்கட்டூர் பகுதியில் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக செய்யாறு புதிய காஞ்சீபுரம் சாலையைச் சேர்ந்த ஷாஜகான், தென்கழனி பகுதியில் லாட்டரி சூதாட்டத்தில் ஈடுபட்ட கொடையம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை ஆகியோரை போலீசார் கைது செய்து, நீதிபதியின் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News