டிரைவர் இல்லாமல் நிற்கும் பறக்கும் படை வாகனங்கள்
செய்யாறில் பறக்கும்படை வாகனங்களை இயக்க ஓட்டுனர்கள் இல்லாததால் 3வது நாளாக ரோந்து பணியில் ஈடுபாடாமல் தாலுக்கா அலுவலகத்திலேயே வாகனங்கள் நிறுத்திவைப்பு.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் பறக்கும்படை வாகனங்களை இயக்க ஓட்டுனர்கள் இல்லாததால் பறக்கும்படையினர் ரோந்து பணிக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
பறக்கும்படை வாகனங்கள் மூன்றாவது நாளாக தாலுக்கா அலுவலக வாளாகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. செய்யாறு சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்காக பறக்கும்படை குழுக்கள் மூன்றும், நிலை கண்காணிப்பு குழுக்கள் மூன்று என ஆறு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.
ஒரு குழுவில் ஒரு கண்காணிப்பு அதிகாரி, ஒரு பெண் போலீஸ் உட்பட மூன்று போலீசார் மற்றும் ஒரு வீடியோ கிராப்பர் என நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவும் 3 சிப்டுகளாக பிரித்து சுழற்சி முறையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் பணியில் ஈடுபட்டு வருவது வழக்கம்.
இந்நிலையில் செய்யாறு சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்ட, பறக்கும் படை குழு வாகனத்தின் டிரைவர் பணிக்கு வராததால் ரோந்து பணிக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
ஓட்டுனர்கள் வராததால் தாலுக்கா அலுவலக வளாகத்திலேயே வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ரோந்து பணிக்கு வந்த போலீசார், அதிகாரிகள் மற்றும் வீடியோ கிராபர்கள் தாலுகா அலுவலகத்திலேயே காத்துக் கிடந்தனர். இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் பிரமுகர்கள் மற்றும் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.