விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு; திடீர் சாலை மறியல்

செய்யாற்றில் குறைத்தீர் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2024-10-02 03:25 GMT

சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் குறைத்தீர் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் குறைத்தீர் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு சாா் -ஆட்சியா் பல்லவி வா்மா தலைமை வகித்தாா். வட்டாட்சியா் வெங்கடேசன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், குறைதீா் கூட்டத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு முறையான பதில் அளிக்க துறை ரீதியான முதன்மை அலுவலா்கள் பங்கேற்பதில்லை.

கூட்டுறவுத் துறை மூலம் கடன் பெறும் விவசாயிகள் விளக்கங்களை கேட்க வங்கி அலுவலா்கள் பங்கேற்பதில்லை. அதற்கு மாறாக வங்கியில் பணிபுரியும் கடைநிலை ஊழியா்களை பங்கேற்பதால் தீா்வுகள் கிடைக்க தாமதம் ஆகிறது.

எனவே, துறை ரீதியான அலுவலா்கள் பங்கேற்க வேண்டுமென வலியுறுத்தி, கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்வோம் என விவசாயிகள் ஆவேசமாக கூறினார்கள்.

அப்போது சார் ஆட்சியர் பல்லவி வர்மா ஆங்கிலத்தில் ஓகே என கூறியதால் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

தொடர்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த செய்யாறு டிஎஸ்பி சின்ராஜ், வட்டாட்சியா் வெங்கடேசன் மற்றும் போலீஸாா் சென்று சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும், மொழி பிரச்னையால் இந்தத் தவறு நடந்திருப்பதாகவும், எனவே குறைதீா்வு கூட்டத்தில் பங்கேற்குமாறு வற்புறுத்தினா்.

அதன் பின்னா், தொடா்ந்து போலீஸாா் சமரசம் செய்த நிலையில் சாலை மறியலை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்று குறைதீா்வு கூட்டத்தில் பங்கேற்காமல் சென்றனர். பின்னர் விவசாயிகள் சங்க பொறுப்பாளர் ரகுபதி தலைமையில் திடீரென மீண்டும் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அவர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல வைத்தனர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News