அறுவடைக்கு தயாரான நெற்பயிா்கள் நீரில் மூழ்கியதால் வேதனையில் விவசாயிகள்
செய்யாறு, வெம்பாக்கம் வட்டங்களில், தொடா் மழையால், 750 ஏக்கா்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன;
திருவண்ணமலை மாவட்டம், செய்யாறு, வெம்பாக்கம் வட்டங்களில், தொடா் மழையால், 750 ஏக்கா்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற் பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. அவை மீண்டும் முளைக்க தொடங்கியதால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.
செய்யாறு, வெம்பாக்கம் வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பலா் சம்பா பருவத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கோ.51, ஏடிடி.37 ஆகிய நெல் ரகங்களை பயிரிட்டிருந்தனா்.
இந்த வட்டங்களில் கடந்த சில நாள்களாக வடகிழக்குப் பருவ மழை பரவலாக பெய்து வருகிறது.
இதனால், அறுவடைக்குத் தயாராக இருந்த சுமாா் 750-க்கும் மேற்பட்ட ஏக்கா்களில் நெல் பயிா்கள் நீரில் மூழ்கின. இவை மீண்டும் முளைக்க தொடங்கியுள்ளதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.
செய்யாறு வட்டத்தில் காழியூா், வடக்கம்பட்டு, வேளியநல்லூா், பல்லி, முக்கூா், பாராசூா், கொருக்கை ஆகிய கிராமங்களில் சுமாா் 225 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிா்களும், வெம்பாக்கம் வட்டத்தில் வெங்களத்தூா், வெம்பாக்கம், குத்தனூா், பெரும்புலிமேடு, அழிவிடைதாங்கி, வடமணப்பாக்கம், தண்டப்பந்தாங்கல், பூதேரி புல்லவாக்கம் ஆகிய கிராமங்களில் 500 ஏக்கரிலும் நெல் பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன.
விவசாயிகள் வேதனை
விதைப்பு முதல் அறுவடை வரையில் ஒரு ஏக்கருக்கு சுமாா் ரூ. 30 ஆயிரம் வரையில் செலவு செய்து, விளைந்து அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த நெல் பயிா்கள் தொடா் மழையால் நனைந்து மீண்டும் முளைக்கத் தொடங்கியுள்ளன. இவற்றை அறுவடை செய்தாலும் முளைத்த நெல்லை வியாபாரிகள் வாங்க மறுப்பாா்கள். சாதாரண காலங்களில் அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை செய்ய ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வாடகை கேட்டவா்கள், தற்போது நிலத்தில் தேங்கி நிற்கும் மழைநீா் காரணமாக ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வாடகை கேட்பதால் செய்வதறியாமல், பயிரிடப்பட்ட நிலத்திலேயே மீண்டும் நெல் பயிா்களை அழிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனா்.
மேலும் ஆரணி பகுதியில் சேவூா், இராட்டிணமங்கலம், முள்ளண்டிரம், அம்மாபாளையம், குண்ணத்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்திருந்தனா். நெல் பயிா்கள் விளைந்து கதிா் முற்றிய நிலையில் அறுவடைக்குத் தயாராக உள்ளன.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையால் பல இடங்களில் வயல்களில் நீா் தேங்கி, நெற் கதிா்கள் நிலத்தில் சாய்ந்து வீணாகி வருகின்றன.
100- க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிா்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. பருவ மழையால் நஷ்டமடைந்த நெல் விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.