செய்யாறு அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆங்கில ஆசிரியர் கைது

செய்யாறு அருகே அரசு பள்ளியில் 9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆங்கில ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-04-02 11:01 GMT

செய்யாறு அருகே அரசு பள்ளியில் 9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆங்கில ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த கூழமந்தலில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு காஞ்சிபுரம் டவுன் ராஜகோபால் தெருவை சேர்ந்த முருகன்(43) என்பவர் ஆங்கில ஆசிரியராக உள்ளார். இவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி வந்தாராம்.இதேபோல் நேற்று முன்தினம் ஆசிரியர் முருகன் 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டாராம். இதுபற்றி அந்த மாணவி பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளார். பின்னர் பெற்றோரிடமும் கூறி அழுதுள்ளார்.

இதையடுத்து செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

இதுகுறித்த புகாரின் பேரில் செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சோனியா மற்றும் போலீசார் பள்ளிக்கு நேரில் சென்று, மாணவிகளிடம் விசாரணை செய்தனர்.

போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து ஆசிரியர் முருகனை நேற்று கைது செய்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 

லாரி திருடிய 3 பேர் கைது

திருவண்ணாமலை அடுத்த கிளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் மனோகர் (வயது 39). இவரும், அவரது நண்பர்கள் 2 பேரும் சேர்ந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு போர்வெல் அமைக்கும் லாரியை வாங்கி தொழில் செய்து வருகின்றனர். நேற்று  இரவு மனோகர் வீட்டின் முன்பு லாரி நிறுத்தப்பட்டு இருந்தது.  அதிகாலையில் அவர் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்த போது லாரி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் மர்ம நபர்கள் லாரியை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திருவண்ணாமலை அருகே உள்ள சேரியேந்தல் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை, அவரது மகன் பிரபு, உறவினர் மகன் மணிகண்டன் ஆகியோர் இணைந்து மனோகரின் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த லாரியை திருடிச் சென்றதும், ஏழுமலைக்கும், மனோகரனுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்ததால் லாரியை அவர் கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஏழுமலை, பிரபு, மணிகண் டன் ஆகிய 3 பேரையும்  கைது செய்தனர்.

Tags:    

Similar News