கல்வி வியாபாரமாகிவிட்டது: மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்திட நீதிபதி அறிவுரை
மாணவர்கள் ஜாதி, மதங்களின் பின்னால் சென்று வாழ்க்கையை பாழாக்கிக் கொள்ளாதீர்கள் என்று ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரன் அறிவுரை.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி ஆண்டு விழாநடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் கலைவாணி தலைமை தாங்கினார். முன்னதாக பேராசிரியர் ரவிச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக கல்லூரியின் முன்னாள் மாணவரும், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான கிருபாகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது,
நான் பயின்ற கல்லூரி சிறப்பு விருந்தினராக பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இன்றைய காலகட்டத்தில் கல்வி வியாபாரமாகிவிட்டது. தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு பயில ஆண்டிற்கு ரூ. 1 லட்சம் வரை செலவாகிறது, ஆனால் அரசு கல்லூரியில் அதிகபட்சமாக ரூ.2,500 கட்டணம் தான் இருக்கும். இதனை உணர்ந்து நீங்கள் படிப்பில் கவனம் செலுத்திட வேண்டும். கல்லூரிக் கல்வி என்பது நாற்றங்காலை போன்றது, நன்றாக வளர்ந்தால் தான் அடுத்த உயர் படிப்பிற்கும், வேலை வாய்ப்பு இருக்கும் அடித்தளமாக அமையும். போட்டிகள் நிறைந்த உலகில் உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். தாய்மொழி தமிழோடு ஆங்கில அறிவையும் வளர்த்துக் கொண்டால்தான் உலகில் வேலைவாய்ப்பு பெற முடியும்.
நீங்கள் தான் உலகம் என தங்களது சுக, துக்கங்களை மறந்து உங்களை வளர்த்த பெற்றோர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு உங்களுக்கான எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். சினிமா பிரபலங்களின் நிழல்களை நம்பாமல் நிஜங்களை நம்புங்கள். மாணவர்களாகிய நீங்கள் ஜாதி மதங்களின் பின்னால் சென்று வாழ்க்கையை பாழாக்கிக் கொண்டு பலியாகாதீர்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.