நீர்நிலைப் பகுதிகளில் செல்ல குழந்தைகளை அனுமதிக்க வேண்டாம்: எம்எல்ஏ வேண்டுகோள்
நீர்நிலைப் பகுதிகளுக்கு செல்ல குழந்தைகளை அனுமதிக்க வேண்டாம் என செய்யாறு எம்எல்ஏ ஜோதி வேண்டுகோள் விடுத்துள்ளார்
தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை மற்றும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டங்களில் ஓடும் செய்யாறு, பாலாறு ஆகியவற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் அவற்றின் அருகில் உள்ள ஏரி குளங்களில் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக செய்யாறு தொகுதியில் உள்ள ஏரி, குளம், குட்டை மற்றும் ஆறுகளில் நீர் வரத்து மிக அதிகமாக உள்ளது. புது வெள்ளத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் சென்று பார்த்து வருகின்றனர்.
பெற்றோர்கள் வீட்டின் அருகேயுள்ள நீர்நிலை பகுதிகளுக்கு செல்லாதபடி குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டும் . அவ்வப்போது கண்காணித்துக் கொண்டே இருக்கவேண்டும். மேலும் பல இடங்களில் ஆற்று வெள்ளத்தில் சிக்கி பெரியவர்கள் பலர் பலியாகியுள்ளனர் . அண்மையில் செய்யாறு அருகே உள்ள சிருங்கட்டுர் கிராமத்தை சேர்ந்த மூன்று சிறுவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். எனவே இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்கும் விதமாக பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் மீது முழு கவனம் செலுத்த வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் ஜோதி கேட்டுக்கொண்டார்.