தீபாவளி சீட்டு மோசடி: பணத்தை இழந்தவர்கள் திடீர் போராட்டம்

நிதிநிறுவனத்தில் தீபாவளி சீட்டு சேர்ந்து பணத்தை இழந்தவர்கள் திருவண்ணாமலையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2023-04-13 03:04 GMT

போராட்டத்தில் ஈடுபட்ட பணத்தை இழந்தவர்கள்.

நிதிநிறுவனத்தில் தீபாவளி சீட்டு சேர்ந்து பணத்தை இழந்தவர்கள் திருவண்ணாமலையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை தலைமை இடமாகக் கொண்ட தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் செய்யாறு, ஆரணி, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிளை அலுவலகங்களை தொடங்கி பொதுமக்களிடம் ரூ.500 முதல் ரூ.25 ஆயிரம் வரை பல்வேறு குழுக்களாக பிரித்து தீபாவளி சீட்டு நடத்தி வந்தனர்.

இது போன்ற மோசடிகளை தவிர்க்க விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மக்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டாலும் மோசடி மன்னர்களின் கவர்ச்சி வலையில் பொதுமக்கள் சிக்கிக் கொள்கின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த எஸ் எஸ் என்ற நிதி நிறுவனம் ஆரணி காஞ்சிபுரம் செங்கல்பட்டு சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிளை அலுவலகங்களை அமைத்து எஸ்.எஸ் என்ற பெயரில் பைனான்ஸ் டிராவல்ஸ் நடத்தி வந்த சீனிவாசன், ராஜ்குமார் ஆகியோர் தீபாவளி சிறுசேமிப்பு திட்டத்தை ஆரம்பித்தனர்.

சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம் என்றும் எட்டு வருடமாக அனுபவமிக்கவர்களால் நடத்தப்படும் நிறுவனம் என்றும் பொருட்கள் வீடு தேடி வரும் என்றும் பத்து கிராம் தங்க நாணயம் வெள்ளி கொலுசு வெள்ளி காப்பு மளிகை பொருட்கள் போன்ற கவர்ச்சிகரமான பரிசுகளை தருவதாகவும் நோட்டீஸ் வெளியிட்டு பொதுமக்களிடம் பணம் வசூலித்தனர். மேலும் ஒரு லட்சம் கட்டினால் ஐந்து பவுன் நகை வழங்கப்படும் என அறிவிப்பும் செய்தனர்.

அவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏஜெண்டுகளை நியமனம் செய்து கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டனர். அதனை நம்பி ஒவ்வொரு ஏஜெண்டும் தலா 200 முதல் 2ஆயிரம் உறுப்பினர்களை சீட்டு நிறுவனத்தில் இணைத்து உள்ளனர்.

இதன் மூலம் கிடைத்த பல கோடி ரூபாயை சுருட்டிக்கொண்டு அந்த நிதிநிறுவனத்தை சேர்ந்தவர்கள் தலைமறைவாகினர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் செய்யாறு போலீஸ் நிலையம், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் என பல்வேறு இடங்களில் புகார் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்புடைய சீனிவாசன் என்பவரை கைது செய்தனர்.

ஆனால் முக்கிய குற்றவாளிகளை கைது செய்யவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட ஏஜெண்டுகள் மற்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் என சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் காஞ்சி சாலை அருகே திரண்டனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு கோஷம் எழுப்பியவாறு ஊர்வலமாக வந்தனர்.

அங்கு அவர்கள் மோசடியில் ஈடுபட்டு தலைமறைவானவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் ஒவ்வொருவரும் தாங்கள் இழந்த தொகை எவ்வளவு, ஏஜெண்டுகள் தாங்கள் சேர்த்தவர்கள், அவர்கள் இழந்த பணம் குறித்து ஆதாரங்களுடன் தனித்தனியாக பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தனர். அந்த மனுக்களை போலீசார் பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடமிருந்து தனித்தனியாக புகார் மனுக்களை இன்ஸ்பெக்டர் அசோக் சப் இன்ஸ்பெக்டர் மனோகரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

Tags:    

Similar News