வகுப்பறை பெஞ்சில் உட்காருவதில் தகராறு: மாணவருக்கு கத்திக்குத்து

செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் வகுப்பறை பெஞ்சில் உட்காருவதில் ஏற்பட்ட தகராறில் மாணவர் கத்தியால் குத்தப்பட்டார்.

Update: 2022-05-20 01:21 GMT

கலைக்கல்லூரி வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், குத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பொருளியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.  நேற்று தனது வகுப்பறையில் ஏற்கனவே 4 பேர் அமர்ந்திருந்த பெஞ்சில் 5-வது ஆளாக அந்த மாணவர் அமர்ந்துள்ளார். இவர் குத்தனூர் பகுதியைச்  சேர்ந்தவராவார்.  அந்த பெஞ்சில் கோடை நகர் பகுதியை சேர்ந்த மாணவர்கள் அமர்ந்திருந்தனர்.

ஒரு மாணவர் ஏன் இங்கே அமருகிறாய்? எனக் கேட்டதாக தெரிகிறது. அப்போது கொடநகர் மாணவருக்கும், குத்தனூர் மாணவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த கொடநகர் மாணவர், குத்தனூர் மாணவருடைய முகத்தில் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து குத்தனூர் மாணவர், அதே கிராமத்தைச் சேர்ந்த நண்பரும் அக்கல்லூரியில் படிக்கும் மற்றொரு மாணவரிடம் கூறினார். இன்று கல்லூரிக்கு வந்த குத்தனூரை சேர்ந்த மற்றொரு மாணவர், எனது நண்பரான பொருளியல் படிக்கும் மாணவரை தாக்கியவர் யார்? என விசாரித்தார். அதற்கு கொடநகர் மாணவர், நான் தான் தாக்கினேன், எனப் பதில் அளித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த குத்தனூரை சேர்ந்த மற்றொரு மாணவர், தான் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் கொடநகர் மாணவரை குத்தினார். அதில் படுகாயம் அடைந்த அவர் செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து தகவல் அறிந்த செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News