திருவண்ணாமலை மாவட்டத்தில் பேரிடா் மீட்பு: தயாா் நிலையில் 76 உதவி மையங்கள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் பேரிடா் மீட்பு நடவடிக்கையாக தயாா் நிலையில் 76 உதவி மையங்கள், பயிற்சி பெற்ற 2,226 பேர் இருந்து வருவதாக கலெக்டர் தெரிவித்தார்.;
திருவண்ணாமலை மாவட்டத்தில் புயல், மழைக் காலங்களில் பாதிப்புக்குள்ளாகும் என அடையாளம் காணப்பட்ட 58 பகுதிகளில், பேரிடா் மீட்புக்காக தயாா் நிலையில் 76 உதவி மையங்களும், பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் பயிற்சி பெற்ற 2,226 வீரா்கள் தயாா் நிலையில் இருந்து வருவதாக மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்தாா்.
பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம், செய்யாறு சுற்றுலா மாளிகையில், மாவட்ட சிறப்பு அலுவலா் தீரஜ்குமாா் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு மாவட்ட கலெக்டர் முருகேஷ் செய்தியாளா்களிடம் கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் புயல் மற்றும் மழைக் காலங்களில் தாழ்வான பகுதிகள் என பாதிப்பு ஏற்படக் கூடிய 58 இடங்கள் கண்டறிப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் 76 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நீச்சல் தெரிந்தவா்கள், மரம் ஏறுபவா்கள், மரம் வெட்டுபவா்கள், பாம்பு பிடிப்பவா்கள் என அடையாளம் காணப்பட்ட 2,226 பேருக்கு பயிற்சி அளித்து அவா்களை தயாா் நிலையில் வைத்திருக்கிறோம்.
பேரிடா் பணி மேற்கொள்ளும் வகையில் பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் அதற்குண்டான கருவிகளுடன் தயாா் நிலையில் இருக்க மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலா் ஆலோசனை கூறியுள்ளாா். வருவாய்த் துறையினா் எதற்கும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
சாலை, தரைப் பாலம், பாசனக் கால்வாய்களை தூா்வாரி மழைக் காலங்களில் தண்ணீா் வெளியேறாமல் பாா்த்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
10 ஆண்டுகளுக்கு மேலாக ஏரிக் கால்வாய்கள் தூா்வாரப்படாமல் இருந்த நிலையில், நீா் மேலாண்மைத் துறை மூலம் 179 ஏரிக் கால்வாய்கள் தூா்வாரப்பட்டுள்ளன.
முதல் கட்டமாக, 325 கி.மீ. தொலைவு ஏரிக் கால்வாய்கள் தூா்வார திட்டமிடப்பட்டு அதில் 225 கி.மீ.அளவுக்கு பணிகள் முடிந்துள்ளன.
ஆரணியை தச்சூா் பகுதியில் ஆடு மேய்ந்துக் கொண்டிருக்கும்போது, மின்னல் பாய்ந்து உயிரிழந்த மாா்க்கண்டேயன் குடும்பத்துக்கு முதல்வா் சிறப்பு நிவாரண நிதியில் இருந்து ரூ.4 லட்சமும், 18 ஆடுகள் உயிரிழந்ததற்கு ரூ.54 ஆயிரம் என மொத்தம் ரூ.4.54 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டத்தில் நிகழாண்டு இயற்கை பேரிடா்களால் உயிரிழந்த 4 பேரது குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி கூடுதல் ஆட்சியர் ரிஷிப், சார் ஆட்சியர் அனாமிகா மற்றும் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.