பைரவர் கோவிலுக்கு செல்லும் கிரிவலப் பாதையை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை
நரசமங்கலம் கால பைரவர் கோவிலுக்கு செல்லும் கிரிவலப் பாதையை சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
குன்றின் மீது அமைந்துள்ள கால பைரவர் கோவில்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை அடுத்துள்ளது தூசி-மாமண்டூர் கிராமங்கள். இந்த கிராமங்களுக்கு மேற்கு பகுதியில் மாமண்டூர் பெரிய ஏரி உள்ளது. இதன் அருகே நரசமங்கலம் கிராமம் உள்ளது.
தமிழகத்தில் அமைந்துள்ள பெரிய குடைவரைகளுள் ஒன்று. நரசமங்கலம் – மாமண்டூர் கிராமத்தில் உள்ள மலைக்குன்றில் 4 குடைவரைகோயில்கள் அமைந்துள்ளன. இக்கோயில்கள் மகேந்திரவர்மனும் அவரது பின்வந்த அரசர்களாலும் அமைக்கப்பட்டது. வலதுகோடியில் அமைந்துள்ளது முதல் மற்றும் இரண்டாம் குடைவரை முறையே விஷ்ணுவிற்கும் சிவனுக்கும் அமைக்கப்பட்டுள்ளது.
குன்றின் மீது அமைக்கப்பட்டுள்ள 3 வது குடைவரை கருவறையில் இறை உருவங்கள் இல்லை. தென்கோடியில் அமைக்கப்பட்டுள்ளது 4வது முற்றுபெறறாத குடைவரை. வரலாற்றுச்சிறப்பு மிக்க மகேந்திரவர்ம பல்லவனின் பல பட்டப்பெயர்கரை கூறும் பல்லவர கிரந்த கல்வெட்டு, இம்மலைக்குன்றின் பின்புறம் அமைந்துள்ள சித்திரமேக தடாகத்தைப் பற்றிய குறிப்புள்ள 10 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு என வரலாற்றுப்பெட்டகமாக அமைந்துள்ளது இக்குடைவரைக்கோயில்,
இக்குன்றின் மீது வாலீஸ்வரர் கோயிலும், பைரவர் கோயிலும் அமைந்துள்ளது. குன்றின் வடகோடியில் சமணர் படுக்கையும் அது அமைந்துள்ள பாறையின் மீது திருவண்ணாமலை மாவட்டத்தில் மிகப்பழைய கி.பி. முதல் ஆம் நூற்றாண்டு தமிழி கல்வெட்டும் காணலாம். வந்தவாசி காஞ்சிபுரம் சாலையில் நரசமங்கலம் கிராமத்தில் இருந்து மேற்கே 2 கி.மி. தூரத்தில் அமைந்துள்ளது.
இந்த கிராமத்தின் பின்புறத்தில் மாமண்டூர் ஏரி கரைகள் குன்றுகள் போல் இயற்கையாகவே அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு செய்யாற்றில் இருந்து தண்டரை கால்வாய் மூலமும், பாலாற்றில் இருந்து ராஜா கால்வாய் மூலமும் தண்ணீர் வருகிறது. இந்த ஏரியால் 4200 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஏரிக்கரையின் உச்சியில் கால பைரவர் கோவிலும், ஏரிக்கரையின் அடிவாரத்தில் குடவரை கோவிலும் உள்ளது. இந்த இரண்டு கோவில்களும் 8-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
கால பைரவர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். கிரிவலம் செல்ல போதிய பாதை வசதி இல்லாததால் பக்தர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதேபோல், ஏரிக்கரையின் அடிவாரத்தில் இருந்து கால பைரவர் கோவிலுக்கு செல்லும் பாதையும் சேதமடைந்து செடி-கொடிகளால் மண்டிக் கிடக்கின்றன.
இதனால் ஏரிக்கரையின் உச்சியில் உள்ள கால பைரவர் கோவிலுக்கு செல்ல பக்தர்கள் அச்சப்படுகின்றனர். எனவே, மாமண்டூர் கால பைரவர் கோவிலின் கிரிவலப் பாதையையும், நடைபாதையையும் சீரமைக்க தொல்லியல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.