நெகிழி மறுசுழற்சி, பசுமை பாதுகாப்பு வலியுறுத்தி சைக்கிள் பயணம்
செய்யாறு வழியாக ஆந்திர இளைஞர் பிளாஸ்டிக் மறுசுழற்சி, பசுமை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.;
சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள ஆந்திர இளைஞர் சைதன்யாவுடன் செய்யாறு பகுதியை சேர்ந்தவர்கள்.
செய்யாறு வழியாக ஆந்திர இளைஞர் பிளாஸ்டிக் மறுசுழற்சி, பசுமை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து 50,000 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டு கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம், நெல்லூா் புஜ்ஜிரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த அரிசி வியாபாரி குர்ரம் நரசிம்மலு மகன் சைதன்யா (வயது23). பி.பாா்ம். பயின்றுள்ள இவா், நெகிழி மறுசுழற்சி, பசுமை பாதுகாப்பு, மரம் நடுதல், மண் வளம் பாதுகாத்தல், உணவை வீணாக்காமல் இருத்தல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக, கின்னஸ் சாதனை முயற்சியாக காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரை (சுமாா் 50,000 கி.மீ.) சைக்கிள் பயணத்தைத் தொடங்கி உள்ளார்.
தினமும் 80லிருந்து 120 கிலோமீட்டர் பயணம் செய்யும் வகையில் பிரத்தியேகமான நவீன சைக்கிளை வாங்கி உபயோகித்து வருகிறார். தற்போது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான 50,000 கிலோ மீட்டர் பயணத்தை கடந்த டிசம்பர் 26ம் தேதி ஆந்திராவில் தொடங்கி 61 வது நாளான இன்று காலை கல்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வந்துள்ளார்.
அப்போது அவா் கூறியதாவது:-
தினம்தோறும் 80 முதல் 120 கி.மீ. வரை பயணம் மேற்கொள்கிறேன். பிளாஸ்டிக் மறுசுழற்சி குறித்தும் பசுமை பாதுகாப்பு, மண் வளம் பாதுகாப்பு, மரம் நடுதல் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறேன்.
அதற்காக நவீன சைக்கிளை வாங்கியுள்ளேன். கின்னஸ் சாதனை பதிவிற்காக எலக்ட்ரானிக் கையடக்க கருவி மூலம் தினமும் பயணம் செய்யும் தொலைவு, நேரம், காலத்தை பதிவு செய்து பயணத்தை தொடா்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இவா், கடந்த ஆண்டு நெல்லூா் முதல் கன்னியாகுமரி வரையிலும், பின்னா், நெல்லூா் முதல் பாகிஸ்தான் எல்லை வரை சுமாா் 3,880 கி.மீ. தொலைவு 70 நாட்கள் சைக்கிள் பயணம் மேற்கொண்டு ஆந்திர அரசின் யூத் ஐகான் விருதை பெற்றவா் வருவது குறிப்பிடத்தக்கது.