வேதபுரீஸ்வரர் கோவிலில் புதிய திருமண மண்டபம் கட்டும் பணிகள் தொடக்கம்
செய்யாறு வேதபுரீஸ்வரர் கோவிலில் ரூ.3.28 கோடியில் புதிய திருமண மண்டபம் கட்டும் பணிகள் தொடங்கியது.
செய்யாறு வேதபுரீஸ்வரர் கோவிலில் ரூ.3.28 கோடியில் புதிய திருமண மண்டபம் கட்டும் பணிகள் தொடங்கியது.
செய்யாறு டவுன் திருவோத்தூர் பகுதியில் அமைந்துள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட திருமண மண்டபம் தற்போது பயன்பாடற்ற நிலையில் உள்ளதால் அதனை முழுமையாக அகற்றிவிட்டு அந்த இடத்தில் புதிதாக திருமண மண்டபம் அமைத்திட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதனை ஏற்று ரூ.3.28 கோடி மதிப்பில் இந்து சமய அறநிலையத் துறை மூலம் புதிய திருமண மண்டபம் கட்டிட அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. அதன்படி கட்டுமான பணிகளை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இதனையொட்டி வேதபுரீஸ்வரர் கோவிலில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் பாண்டுரங்கன், செயல் அலுவலர் ஹரிகரன், திருவண்ணாமலை உதவி பொறியாளர் சீனிவாசலு, நகர மன்ற தலைவர் மோகனவேல், நகராட்சி ஆணையாளர் ரகுராமன், நகர தி.மு.க. செயலாளர் விஸ்வநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
ரேசன் கடை கட்ட பூமி பூஜை
செய்யாறு டவுன், காமராஜ்நகரில் ரேசன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.நகர மன்ற தலைவர் மோகனவேல் தலைமை வகித்தார். நகர செயலாளர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்எல்ஏ, மாவட்ட செயலாளர் தரணிவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய ரேசன் கடை கட்ட பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.
மேலும் அதே பகுதியில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாமை ஒ.ஜோதி எம்எல்ஏ மற்றும் மாவட்ட செயலாளர் தரணிவேந்தன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் மார்க்கெட் பகுதி, செய்யாறு பஸ் நிலையம், ஆரணி கூட்டு சாலை ஆகிய இடங்களில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, கூல்ட்ரிங்ஸ், மோர் ஆகியவை வழங்கினர்.