செய்யாற்றில் ஜமாபந்தி நிறைவு: நலத்திட்ட உதவிகள் வழங்கல்
செய்யாற்றில் ஜமாபந்தி நிறைவு நாள் விழா நடைபெற்றது.;
நல திட்ட உதவிகளை வழங்கிய வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு தலைவர்
செய்யாறு வட்டம் 1433 ஆம் பசலி வருவாய் தீர்வாய நிறைவு நாள் விழா நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் 1433 ஆம் பசலி தீர்வாக நிறைவு நாள் விழா நேற்று மாலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டாட்சியர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் முன்னிலை வகித்தார்.
கிராம உதவியாளர் சங்கம் சார்பில் ஆனந்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் சார்பில் அருள், மாவட்ட வருவாய் துறை சங்கம் சார்பில் ஸ்ரீதர், விவசாய சங்க பிரதிநிதிகள் கிரண் பிரசாத், ரகுபதி, மாளிக்கப்பட்டு ராஜி, தயாளன், வெங்கடேசன், முருகன் உள்ளிட்டோர் பேசினர்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் திமுக அரசின் சாதனைகளைப் பட்டியிட்டு மக்களுக்காகவும், மாணவர்களுக்காகவும் நல திட்டங்களை தமிழக முதல்வர் நாள்தோறும் நடைமுறைப்படுத்தி வருகின்றார். மேலும் நமது மாவட்ட பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு , ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன், செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி, ஆகியோர் உதவியுடன் செய்யாறு தொகுதி வளர்ச்சி அடைந்துள்ளது. மக்கள் நலனில் அக்கறை கொண்ட நாம் முதல்வருக்கு நாம் துணை நிற்க வேண்டும் என்று பேசினார்.
தலைமை உரையாற்றிய வருவாய் தீர்வாய அலுவலரும் கலால் உதவி ஆணையருமான செந்தில்குமார் நல திட்ட உதவிகளை வழங்கி பேசும்போது கடந்த 8 நாட்களில் 2082 மனுக்கள் பெறப்பட்டதாகவும், உடனடியாக 25 மனுக்கள் மீது தீர்வு கண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். பிற மனுக்கள் மீது ஒரு மாதத்திற்குள் தீர்வு கண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் 196 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
ஜமாபந்தி நிறைவு நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் பாபு, ஒன்றிய குழு உறுப்பினர் ஞானவேல், துணை வட்டாட்சியர்கள், வழங்கல் அலுவலர் சங்கீதா, உள்ளிட்ட வருவாய் துறை, வேளாண்துறை, தோட்டக்கலைத் துறை, மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், அலுவலர்கள், உதவியாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டாட்சியர் அசோக் குமார் நன்றி கூறினார்.