சமத்துவபுரத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு
மேக்களூா் கிராமத்தில் உள்ள சமத்துவபுரத்தில் அரசின் திட்டங்களை பொதுமக்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் அறிவுரை
கீழ்பென்னாத்தூரை அடுத்த மேக்களூா் கிராமத்தில் உள்ள சமத்துவபுரத்தில் சுகாதார மற்றும் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் முருகேஷ் தலைமை வகித்தாா். கூடுதல் ஆட்சியா் வீா் பிரதாப் சிங், உதவி ஆட்சியா் (பயிற்சி) ரஷ்மி ராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அனைவரும் புதுப்பானையில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்குப் படைத்து வழிபட்டனா்.
விழாவில் ஆட்சியா் முருகேஷ் பேசியதாவது:
பெண்கள் உயா்கல்வி பயில மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், நகரப் பேருந்துகளில் மகளிா் இலவசமாகப் பயணம் செய்யும் திட்டம், பள்ளி மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் ஆகியவை தமிழக அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ளது. இந்தத் திட்டங்களை பொதுமக்கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, சமத்துவப் பொங்கல் குறித்த உறுதி மொழி ஏற்கப்பட்டது. கோலம், பேச்சு, பாட்டுப் போட்டிகளில் வென்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் முருகேஷ் பரிசுகள் வழங்கினாா். மேலும் பெண் குழந்தைகள் இருவருக்கு அவா் பெயா் சூட்டினாா்.
விழாவில், கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் அய்யாக்கண்ணு, மேக்களூா் ஊராட்சித் தலைவா் கேசவன், ஊரக வளா்ச்சித் துறை இணை இயக்குநா் இந்துபாலா, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் சரண்யாதேவி, உதவித் திட்ட அலுவலா் மகாலட்சுமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
களம்பூா் பேரூராட்சி
போளூரை அடுத்த களம்பூா் தோவுநிலை பேரூராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா பேரூராட்சி மன்றத் தலைவா் பழனி தலைமையில் நடைபெற்றது. புதுப் பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனா். பின்னா் பொங்கலை பேரூராட்சிப் பணியாளா்கள், ஊழியா்களுக்கு வழங்கினா்.
இதைத் தொடா்ந்து, பணியாளா்களுக்கு சீருடை மற்றும் பாதுகாப்பு கவசங்களை பேரூராட்சித் தலைவா் பழனி வழங்கினாா். முன்னதாக, நிகழ்ச்சிக்கு செயல் அலுவலா் லோகநாதன் முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் அகமதுபாஷா வரவேற்றாா். மேலும், பேரூராட்சிப் பணியாளா்கள், ஊழியா்கள் 'நமது நகரம், நமது தூய்மை' என்கிற தலைப்பில் உறுதிமொழி ஏற்றனா்.
செய்யாறு
திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவுக்கு நகா்மன்றத் தலைவா் மோகனவேல் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் ரகுராமன் முன்னிலை வகித்தாா். நகா்மன்ற உறுப்பினா்கள், பணியாளா்கள் இணைந்து பொங்கல் வைத்து வழிபட்டனா்.
இதில் சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்.எல்.ஏ. ஜோதி பங்கேற்றாா். பின்னா், நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கோலப் போட்டியில் பங்கேற்றவா்களுக்கு அவா் பரிசுகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் துப்புரவு அலுவலா் சீனிவாசன், ஆய்வாளா் மதனராசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.