செய்யாறு நகரம் வளர்ச்சி பெற வேண்டும் - அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

செய்யாறு நகர வளர்ச்சிக்கு நகராட்சி தலைவர், உறுப்பினர்கள் பாடுபட வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

Update: 2022-05-15 01:22 GMT

செய்யாறு நகராட்சியில் பாராட்டு விழாவில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு பரிசு வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவத்திபுரம் நகராட்சியில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற நகர மன்ற தலைவர் ஆ.மோகனவேல், துணைத் தலைவர் குல்சார் மற்றும் உறுப்பினர்களுக்கான பாராட்டுவிழா நகராட்சி அலுவலகத்தில்  நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஓ.ஜோதி எல்.எல்.ஏ. தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் கீ.ரகுராமன் வரவேற்றார். மாவட்ட ஊராட்சித் தலைவர் பார்வதி சீனிவாசன், செங்கம் எம்.எல்.ஏ. மு.பெ. கிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

சிறப்பு விருந்தினராக அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பேசியதாவது, நகரமன்ற உறுப்பினர் பதவி மிகவும் சிரமமான பொறுப்பாகும். ஒருவர் 5 ஆண்டுகள் பணியாற்றி மீண்டும் வெற்றி பெற்றார். அந்த உறுப்பினர் சிறப்பாக பணியாற்றியவர் என்று பொருள். தொண்டு செய்தால் மட்டுமே அடுத்த முறை வெற்றி பெற முடியும். மக்களுக்கு என்ன தேவையோ அதனை அறிந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும். மக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்த்து வைத்தால் தான் நிலைத்து நிற்க முடியும். புதியதாக பொறுப்பேற்றுள்ள உறுப்பினர்கள் சுயநலம் பார்க்காமல் மக்கள் நலம் தான் முக்கியம் என்று செயல்பட வேண்டும். மக்கள் பாராட்டும் அளவிற்கு நகரமன்ற தலைவர் மோகனவேல் செயல்படவேண்டும்.

நகர மன்ற தலைவர் போட்டி மனப்பான்மையோடு தன் காலத்தில் அரசின் பணிகள் என்ன கொண்டு வந்து சேர்த்து இருக்கிறோம் என்ற நோக்கத்தோடு அரசின் நிதி உதவி பெற்று நகரமன்ற வளர்ச்சிக்கு பணியாற்ற வேண்டும். மக்கள் செலுத்தும் வரி பணத்தை மட்டும் வைத்து நகரத்தை வளர்ச்சி பெறச் செய்ய முடியாது. அரசின் ஒத்துழைப்பு தேவை. செய்யாறு நகரின் வளர்ச்சிக்கு நகர்மன்றத் தலைவருக்கு உறுப்பினர்கள் ஒத்துழைப்பு கொடுத்து திட்ட பணிகளுக்கு நீங்கள் உந்துசக்தியாக இருக்க வேண்டும். செய்யாறு நகரம் எதிர்பார்த்ததைவிட வளர்ச்சி பெற வேண்டும். நகரமன்ற தலைவர் மோகன் நகராட்சிக்கு தேவையான பணிகளை பெற்று மக்களின் பாராட்டுக்களை பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர்கள் பாபு, வெம்பாக்கம் ஒன்றியக்குழு தலைவர் மாமண்டூர் ராஜு, திலகவதி ராஜ்குமார், தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் எ.ம்எஸ்.தரணி வேந்தன், நகர செயலாளர் வழக்கறிஞர் கே.விசுவநாதன், ஒன்றிய செயலாளர்கள் லோகநாதன், வேல்முருகன் முன்னாள் எல்.எல்.ஏ.க்கள் எதிரொலி மணியன், கமலக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News