செய்யாறு அருகே போலீசாரை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
செய்யாறு அருகே தொழுப்பேடு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் போலீசாரை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்;
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஒன்றியம் தொழுப்பேடு கிராமத்தில் சரியாக குடிநீர் விநியோகிக்கவில்லை என்றும் சாலை தெரு விளக்கு வசதி போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் பரசுராமன் மற்றும் சிலர் ஊராட்சி மன்ற தலைவர் வார்டு உறுப்பினர்களிடம் கேட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் துரை, பரசுராமன் தன்னை ஜாதி பெயரை கூறி இழிவு படுத்தியதாக தெரிவித்து கடந்த 22 ஆம் தேதி செய்யாறு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பரசுராமனை கைது செய்தனர்.
இந்நிலையில் வடக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன் பரசுராமன் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பா.ஜ.க. மாவட்ட தலைவர் ஏழுமலை ,நகரத் தலைவர் லட்சுமணன் ,மாவட்ட துணை தலைவர் பன்னீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.