செய்யாறு அருகே பாண்டியர் கால ஆநிரை காத்த வீரனின் நடுகல் கண்டெடுப்பு
செய்யாறு அருகே அனக்காவூா் கிராமத்தில் கி.பி.12 -ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால ஆநிரை காத்த நடுகல் கண்டெடுக்கப்பட்டது.;
செய்யாறு அருகே அனக்காவூா் கிராமத்தில் கி.பி.12 -ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால ஆநிரை காத்த நடுகல் கண்டெடுப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், அனக்காவூா் கிராமத்தில் அருள்மிகு ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் எதிரே சுமாா் நூறு ஆண்டுகளுக்கு முன் நடுத்தெருவில் நடுகல் ஒன்று இருந்தது. போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததாக கூறப்படும் அந்த கல்லை, கோயில் எதிரே கிழக்கு பகுதியில் சாலை ஓரத்தில் வைத்து கிராம மக்கள் பரசுராமராக வழிபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், இந்த நடுகல் கி.பி.12ம் நூற்றாண்டை சேர்ந்த ஆநிரை காத்த பாண்டியர் கால அரியவகை நடுகல் என அந்த கல்லை ஆய்வு செய்த வரலாற்று ஆய்வாளரும், தொல்லியல் ஆர்வலருமான எறும்பூர் கை.செல்வகுமார் கண்டறிந்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:-
இந்த நடுகல் கி.பி.12 -ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆநிரை காத்த பாண்டியா் கால அரியவகை நடுகல் ஆகும். இக்கல்லில் விலங்குகளுடன் சண்டையிட்டு இறந்த வீரனுக்காக வரையப்பட்ட ஓவியங்கள் தொன்மை வாய்ந்ததாக உள்ளது. குறிப்பாக, போரில் இறந்தவா்களுக்கு வைக்கப்படும் கல்லே வீரக்கல்- நடுகல் என்று அழைப்படுகிறது.
அந்த வகையில் இங்கு கண்டெடுக்கப்பட்ட நடுகல் ஆநிரை காத்த போது இறந்த ஒருவரின் நடுக்கல் என்று உறுதியாகக் கூறலாம். இக்கல்லின் மொத்த நீளம் 90 செ.மீ. அகலம் 9 செ.மீ ஆகும். வலது கையில் நீண்ட குறுவாளும், இடக்கையில் ஆயுதம் வைத்திருப்பது போன்று உள்ளது.
மேலும், இப்பகுதியில் ஆய்வுகள் நடத்தினால் பாண்டியா் கால தடயங்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. இதேபோல, செய்யாறு அருகே தென்பூண்டிப்பட்டில் விஜயநகர காலத்து நடுகல்லும், திருவண்ணாமலை, செங்கம், தருமபுரி ஆகிய பகுதிகளில் அதிக அளவில் குறிப்பாக சோழா்கள், பல்லவா் காலத்து நடுகல்லும் கண்டெடுக்கப்பட்டது என்றாா்.