செய்யாறு அருகே அங்கன்வாடி மையம், பயணிகள் நிழற்குடை திறப்பு
செய்யாறு அருகே அங்கன்வாடி மையம், பயணிகள் நிழற்குடை திறந்து வைக்கப்பட்டன.;
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஒன்றியத்தில் ரூ.17.61 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், பயணிகள் நிழல்குடை ஆகியவை திறந்துவைக்கப்பட்டன.
செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வெம்பாக்கம் ஒன்றியம், பொக்கசமுத்திரம் கிராமத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் 2021 - 22ஆம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.12.61 லட்சத்தில் அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு இருந்தது.
அதேபோல, பிரம்மதேசம் கிராமத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.5 லட்சத்தில் புதிய பயணிகள் நிழல்குடை கட்டடம் கட்டப்பட்டு தயாா் நிலையில் இருந்து வந்தது.
அங்கன்வாடி மையக் கட்டடம், பயணிகள் நிழல்குடை ஆகியவற்றின் திறப்பு விழா நடைபெற்றது. இரு இடங்களில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன் தலைமை வகித்தாா். வெம்பாக்கம் ஒன்றியக் குழுத் தலைவா் மாமண்டூா் ராஜூ முன்னிலை வரித்தாா்.
சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி பங்கேற்று அனைவரின் பயன்பாட்டிற்காக அங்கன்வாடி மையக் கட்டடம், பயணிகள் நிழல்குடை ஆகியவற்றை திறந்து வைத்துப் பேசும்போது, செய்யாறு தொகுதியில் நிலுவையில் உள்ள அடிப்படை வசதிகள் விரைவில் நிறைவேற்றி தரப்படும். அதற்கு உண்டான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும் புரிசை கிராமத்திற்கு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டித் தர வேண்டும் என்றும் , புரிசை கிராமம் வழியாக நகரப் பேருந்து இயக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்துள்ளீர்கள். இக்கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
நிகழ்ச்சியில் திமுக செயற்குழு உறுப்பினர் வேல்முருகன், ஒன்றிய செயலாளர் தினகரன், சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹரி, குப்புசாமி ,வட்டாட்சியர் முரளி, மாவட்ட ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் ,பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.