அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் வசதி ஏற்படுத்தி தந்த முன்னாள் மாணவர்கள்

அனக்காவூர் ஒன்றியம் தேத்துறை கிராமத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதி ஏற்படுத்தித் தந்த முன்னாள் மாணவர்கள்.;

Update: 2022-06-14 13:19 GMT

இலவச பேருந்தில் ஏறிய அரசு பள்ளி மாணவர்கள்.

செய்யாறு தாலுகா அனக்காவூர் ஒன்றியம் தேத்துறை கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 600-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் குறும்பூர், காட்டுக்குடிசை, நர்மாபள்ளம், மேல்மா, மேல்மா கூட்ரோடு, மாலையிட்டான்குப்பம், நெடுங்கல், நெடுங்கல் புதூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 200 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இக்கிராமங்களில் இருந்து மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்து செல்ல போதிய பஸ் வசதி இல்லாத காரணத்தால் மாணவர்கள் சேர்க்கை சில வருடங்களாக குறைந்து காணப்பட்டது. இதனையறிந்த முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்து மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கும் எண்ணத்திலும், மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக குறும்பூர், காட்டுக்குடிசை, நர்மாபள்ளம் வழித்தடத்திலும், மேல்மா, மேல்மா கூட்ரோடு வழித்தடத்திலும், நெடுங்கல், நெடுங்கல் கூட்ரோடு வழித்தடம் என 3 வழித்தடங்களில் மாணவர்களின் வசதிக்காக காலை, மாலை என இருவேளையில் இலவச பஸ் வசதி ஏற்படுத்தி உள்ளனர். தேத்துறை அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இலவச பஸ் வசதி தொடக்க விழாவிற்கு ஊராட்சி மன்றத் தலைவர் ராதிகா குமாரராஜா தலைமை தாங்கினார். தலைமை யாசிரியை புஷ்பாவதி முன்னிலை வகித்தார்.

பல கிராமங்களில் இருந்து இலவச பஸ்சில் வந்த மாணவர்களுக்கு விழாக்குழுவினர் இனிப்பு வழங்கி, மலர்தூவி வரவேற்றனர். அதனைத்தொடர்ந்து விலையில்லா பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் இந்திராணி ஏகாம்பரம், ராஜேஸ்வரி சுந்தரமூர்த்தி, ஷோபனா சரவணன், முன்னாள் மாணவர்கள் குமாராராஜா, தனசேகர், பெற்றோர் ஆசிரியர் கழகம் பச்சையப்பன் மற்றும் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News