செய்யாறு அருகே தொழிலாளி செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல்

செய்யாறு அருகே செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியை போலீசார் லாவகமாக பிடித்து கீழே இறக்கினர்.;

Update: 2023-06-19 13:13 GMT

செல்போன் டவரில் ஏறி கீழே குதிக்கப்போவதாக மிரட்டல் விடுத்த தொழிலாளி.

குடிபோதையில் சென்று விபத்தில் சிக்கிய தொழிலாளியின் இருசக்கர வாகனத்தை போலீசார் வாங்கி வைத்துக்கொண்டதால் ஆத்திரம் அடைந்த அவர் செல்போன் டவரில் ஏறி கீழே குதிக்கப்போவதாக மிரட்டிய சம்பவம் செய்யாறில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவண்ணாமலை அருகே உள்ள தானிப்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஓட்டல் தொழிலாளி ராஜசேகர், செய்யாறு ஆரணி சாலையில் உள்ள வடுகபட்டு கிராமத்தில் ஹோட்டல் ஒன்றில் கூலி வேலை செய்து வருகிறார்.

இவர் செய்யாறு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது போலீசார் அவரை மடக்கி சோதனை செய்ததில் குடித்துவிட்டு இருசக்கர வாகனத்தை ஓட்டியுள்ளார் என்பதை காவலர்கள் அறிந்துள்ளனர். இதன் காரணமாக அவர் மீது குடி போதையில் இரு சக்கர வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்தனர். பின்னர், அவர் உடலில் காயங்கள் இருந்ததால், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு மருத்துவரிடம், உடலில் உள்ள காயங்களுக்கு சிகிச்சை பெறும் போது வாக்குவாதம் செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து போலீசார் ராஜசேகரை செய்யாறு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்

அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைத்துவிட்டு நாளை வருமாறு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்த ராஜசேகர் ஆரணி கூட்ரோடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஆத்திரத்தில் இருந்த அவர் அங்கிருந்த செல்போன் டவரை பார்த்தவுடன் படிக்கட்டு வழியாக கட்டிடத்தின் மேல் உள்ள செல்போன் டவர் மீது விறுவிறு என ஏறி டவரின் உச்சியினை ராஜசேகர் அடைந்தார்.

தொடர்ந்து டவரின் உச்சியில் இருந்த ராஜசேகர் அங்கிருந்து குதித்து விடுவேன் என தற்கொலை மிரட்டல் விடுக்க ஆரம்பித்தார்.

இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து செல்போன் டவர் மீது ஏறிய ராஜ சேகரிடம், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்பொழுது, ராஜா சேகர் தனது இரு சக்கர வாகனம் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இதனை ஏற்க மறுத்த அவர் என்னை பிடிக்க முயன்றால் டவர் உச்சியில் இருந்து குதித்து விடுவேன் என தொடர்ந்து மிரட்டல் விடுத்தார். பிரதான சாலையில் இந்நிகழ்வு நடந்ததால் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு தனது செல்போனில் படம் பிடித்தபடியே சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தபோது தீயணைப்புத் துறையினர் செல்போன் டவரின் ஏணி வழியாக ஏறினர். அதே நேரத்தில் செய்யாறு போலீஸ்காரர் வேலவன், துணிச்சலுடன் மறுபுறத்தில் உள்ள இரும்பு கம்பியினை ஏணியாக பயன்படுத்தி மெதுவாக டவர் மீது ஏறினார். அவர் ராஜசேகர் பின்புறமாக சென்று லாவமாக அவரை பிடித்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து முன்புறமாக ஏறிய தீயணைப்புத் துறையினர் ராஜசேகரை பிடித்து கயிறு கட்டினர். பின்னர் அவரை செல்போன் டவரில் இருந்து மெதுவாக இறக்கி வந்தனர். ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு இறக்கி வந்த ராஜசேகரை செய்யாறு போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இ்ந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News