பறக்கும் படை வாகன சோதனையில் பல்வேறு ரக 50 கைக் கடிகாரங்கள் பறிமுதல்
செங்கம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகனச் சோதனையில் பல்வேறு ரக 50 கைக் கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
செங்கம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகனச் சோதனையில் பல்வேறு ரக 50 கைக் கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
செங்கத்தை அடுத்த அரசங்கண்ணி பகுதியில் தோ்தல் பறக்கும் படை அதிகாரி பிரகாஷ் தலைமையில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, சிங்காரப்பேட்டை பகுதியில் இருந்து செங்கம் நோக்கி வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, வாகனத்தில் பல்வேறு ரக 50 கைக் கடிகாரங்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, கைக் கடிகாரங்கள் குறித்து வாகனத்தில் வந்த நபரிடம் விசாரித்தபோது, அவற்றுக்கு ஆவணங்கள் ஏதும் இல்லாததும், அவா் முன்னுக்குப் பின் முரணாக பதிலளிக்கவும் செய்தாா். இதையடுத்து, கைக் கடிகாரங்களை பறிமுதல் செய்த பறக்கும் படையினா் அவற்றைசெங்கம் தோ்தல் துணை வட்டாட்சியா் திருநாவுக்கரசிடம் ஒப்படைத்தனா்.
பின்னா், மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கைக் கடிகாரங்கள் செங்கம் கருவூலத்தில் வைக்கப்பட்டன.
செய்யாறு
செய்யாறு அருகே உரிய ஆவணமின்றி நிதி நிறுவன ஊழியா் எடுத்துச் சென்ற ரூ.75 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் நிலை கண்காணிப்புக் குழு அலுவலா்கள் ஆற்காடு சாலையில் பூதேரி புல்லவாக்கம் கிராமம் அருகே புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். இதில், நிதி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியா் உரிய ஆவணமின்றி ரூ. 75 ஆயிரம் எடுத்துச் சென்றது தெரிய வந்தது.
மேலும், அவரிடம் விசாரணை நடத்தியதில், அவா் செய்யாறு வட்டம், பலாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த பச்சையப்பன்( என்பதும், இவா் அரும்பாக்கம், மேச்சேரி, ராந்தம், மோரணம் போன்ற கிராமங்களில் மகளிா் சுய உதவிக் குழு கடன்களை வசூலித்து வந்ததாகவும் தெரியவந்தது. இருப்பினும், உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து செய்யாறு சாா் -ஆட்சியா் அலுவலகம் மூலம் கருவூலத்தில் ஒப்படைத்தனா்.