குளத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுவர்கள் உயிரிழப்பு
செய்யாறு அருகே குளத்தில் மூழ்கி அண்ணன், தம்பி உட்பட 3 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
செய்யாறு அருகே திருவிழா அன்று குளத்தில் நீரில் குளிப்பதற்காக சென்ற அண்ணன் தம்பி உட்பட மூன்று சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா, நெடும்பிரை கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ். மாடு தரகு வியாபாரி. இவரது மனைவி செல்வி. இவர்களது மகன்கள் பரத், சந்தோஷ். இதில், பரத் தனியார் பள்ளியில் 5ம் வகுப்பும், சந்தோஷ் 2ம் வகுப்பும் படித்து வந்தனர்.
ராமதாஸ் அவர்களின் அக்கா செய்யாறு வள்ளலார் தெருவை சேர்ந்த வாணி, இவரது கணவர் முரளி கிருஷ்ணன். இவர்களது மகன் சாய் சரண் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் தனது தம்பியின் ஊரான நெடும்பிரை கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்காக வாணி மற்றும் முரளி கிருஷ்ணன் குடும்பத்தினர் தனது மகனுடன் வந்திருந்தனர்.
அப்போது சிறுவர்கள் பரத், சந்தோஷ் மற்றும் சாய் சரண் ஆகியோர் வீட்டின் அருகே உள்ள குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்பொழுது சிறுவர்கள் மூன்று பேரும் அடுத்தடுத்து நீரில் மூழ்கத் தொடங்கினார்.
அந்த கிராம அம்மன் திருவிழாவில் அன்று மாலை நடைபெற இருந்த தீமிதி விழாவிற்காக குளத்தின் அருகே உள்ள பச்சையம்மன் கோவிலில் கரகம் வர்ணிப்பதற்காக ஊர் மக்கள் திரண்டு வந்திருந்தனர். அப்போது குளத்தில் மூன்று சிறுவர்கள் தத்தளிப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம இளைஞர்கள் விரைந்து சென்று குளத்தில் இறங்கி மீட்க முயன்றனர். ஆனால் அந்த மூன்று சிறுவர்களும் நீரில் மூழ்கியதால் சிறுவர்களை மீட்க முடியவில்லை.
உடனடியாக மோராணம் காவல் நிலையத்திற்கு இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் மூன்று பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி, மருத்துவமனைக்கு நேரில் சென்று குழந்தைகளை இழந்த ராமதாஸ் மற்றும் முரளி கிருஷ்ணன் தம்பதிகளுக்கு ஆறுதல் கூறினர். மேலும் டிஎஸ்பி சின்ராஜ் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சிறுவர்கள் ஒரே நேரத்தில் குளத்தில் முழுகி உயிரிழந்த சம்பவம் கிராம மக்களை பெரும் சோகத்தில் ஏற்படுத்தி உள்ளது.