செய்யாறு அருகே நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில் 108 கோ பூஜை

செய்யாறு அருகே உக்கம் பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில் 108 கோ பூஜை நடைபெற்றது.

Update: 2022-02-14 13:13 GMT

நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில் 108 கோ பூஜை நடைபெற்றது. 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உக்கம் பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில் 108 பசுக்கள் மற்றும் கன்றுகளுடன் கோ பூஜை நடைபெற்றது.

இதையொட்டி மூலவர் நட்சத்திர விருட்ச விநாயகர் மற்றும் 27 நட்சத்திர அதிதேவதைகள், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை், தீபாராதனை நடந்தது.  உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகமும், பல வண்ண மலர்களால் அலங்காரமும் செய்து நட்சத்திர விருட்ச விநாயகர் மூஷிக வாகனத்திலும், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணியர் மயில் வாகனத்திலும் எழுந்தருளினர்.

பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள யாக சாலையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி குபேர விசேஷ ஹோமம், லலிதா சகஸ்ர ஜப ஹோமம் மற்றும் சுமங்கலி பூஜை, பாலா பூஜை ஆகியவை நடைபெற்றது. இதனையடுத்து கன்றுகளுடன் கூடிய 108 பசுக்களுக்கு மாலை அணிவித்து மஞ்சள், குங்குமம் வைத்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து உற்சவ மூர்த்திகளான நட்சத்திர விருட்ச விநாயகர் மூஷிக வாகனத்திலும், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணியர் மயில் வாகனத்திலும் 108 பசுக்களை 3 முறை வலம் வந்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பசுக்களுக்கு தீவனம் மற்றும் பழங்களை வழங்கியும், பூஜை செய்தும் வணங்கினர்.

Tags:    

Similar News