சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு, பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
மழையின் காரணமாக சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு, 5 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை
வடகிழக்கு பருவ மழை பெய்யத் தொடங்கிய நிலையில் தமிழ்நாட்டிற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 4- ம் தேதி முதல் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
மழையின் காரணமாக சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு, 5 மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.பி. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கே.ஆர்.பி. அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டியுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி 439 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வெளியேற்றப்படும் தண்ணீர் ஆனது சாத்தனூர் அணைக்கு வரத் தொடங்கியுள்ளது
திருவண்ணாமலை மாவட்ட மக்களின் தண்ணீர் தேவை மற்றும் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 4 மாவட்ட விவசாயிகளின் விவசாய தேவைக்கான தண்ணீர் தேவைகளை சாத்தனூர் அணை பூர்த்தி செய்து வருகிறது.
சாத்தனூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக வினாடிக்கு 3000 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
அணையின் மொத்த கொள்ளளவு 119 அடியாக உள்ள நிலையில் தற்போது நீரின் அளவு 117 அடியை எட்டி உள்ளது.
அணையில் இருந்து இன்று காலை 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, கால்நடைகளை ஆற்றில் இறக்கவும் கூடாது என நீர்ப்பாசன துறை மற்றும் வருவாய் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அணைக்கு வரும் நீரின் அளவைப் பொறுத்து மேலும் கூடுதல் நீர் அணையில் இருந்து திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடி தாக்கி குடிசை வீடு தீயில் கருகியது
கண்ணமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மாலை திடீரென சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
கண்ணமங்கலம் அடுத்த படவேடு ஊராட்சி, மங்களாபுரம் பகுதியில் நேற்று இரவு பெய்த மழையின் போது இடி தாக்கி வாழைமரங்கள் பாதியாக முறிந்து விழுந்தன.
கண்ணமங்கலம் அடுத்த கானமலை ஊராட்சி, இருளம்பாறை அடுத்த முத்தாண்டி குடிசையை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரின் கூரை வீட்டின் மீது இடி விழுந்து தீ பிடித்து எரிந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.
இருப்பினும் குடிசை வீடு முழுவதும் தீப்பிடித்து எறிந்து துணிகள், வீட்டு உபயோக பொருட்கள், நகை மற்றும் பணம் உள்ளிட்டவை தீயில் கருகியது