மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோட்டாட்சியர் உத்தரவு
ஜமாபந்தியில் பெறப்படும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலையில் நடைபெற்ற 3 ம்நாள் ஜமாபந்தியில் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கோட்டாட்சியர் மந்தாகினி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற 3வது நாள் ஜமபந்தி நிகழ்ச்சியில் துரிஞ்சாபுரம் உள் வட்டத்திற்குட்பட்ட துரிஞ்சாபுரம், மல்லவாடி ஊசாம்பாடி, சொரந்தை, கலஸ்தம்பாடி, ச டையனோடை , சானானந்தல், முனியந்தல், இனாம் காரியந்தல் , வெங்காயவேலூர், சொரகுளத்தூர், வடகருங்கா லிபாடி, மாதலம்பாடி, வடகரிப்பலூர், கூத்தலவாடி, கருத்துவம்பாடி, க கொளக்கரவாடி,, பிச்சானந்தல் சீலபந்தல் இனாம்வெளுகனந்தல் உள்ளிட்ட 20 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோட்டாட்சியர் மந்தாகினி மனுக்களை பெற்றார்.
இந்த ஜமாபந்தியில் பட்டா மாறுதல், உட்பிரிவு பட்டா மாறுதல், நில அளவை கருவி, ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், புதிய குடும்ப அட்டை கோருதல், இலவச வீட்டு மனை பட்டா, முதியோர், மாற்றுத்திறனாளி உதவித்தொகை இதர துறைகள், இதர மனுக்கள் உள்பட மொத்தம் 200க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது துறை வாரியாக நடவடிக்கை எடுக்க ஜமாபந்தியிலேயே அதிகாரிகளுக்கு கோட்டாட்சியர் மந்தாகினி உத்தரவிட்டார். மேலும் மனு வழங்கிய பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளும் கோட்டாட்சியர் வழங்கினார்.
இந்த ஜமாபந்தியில் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் (நிர்வாகம்) முருகன், தாசில்தார் மு.தியாகராஜன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பரிமளா, வட்ட வழங்கல் அலுவலர் துரைராஜ், தலைமையிடத்து துணை தாசில்தார் மணிகண்டன், துரிஞ்சாபுரம் மண்டல துணை ரமேஷ், வட்ட ஆய்வாளர் பி.தரணிவாசன் உள் குறுவட்ட அலுவலர் பகவான், வருவாய் ஆய்வாளர் கணேஷ், கிராம நிர்வாக அலுவலர்கள் சீனிவாசன், உத்திரகுமார், பரணிதரன், பலராமன், மதியழகன், மோனிகா மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், பிற துறை அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் கலந்துக்கொண்டனர். முடிவில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் (ஜமாபந்தி) வெங்கடேசன் நன்றி கூறினார்.
செங்கம்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 2024 -ஆம் ஆண்டிற்கான 1433 பசலி வருவாய் தீர்வாயம் நடைபெற்றது. இதில் பாய்ச்சல் வருவாய் உள் வட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சிவா தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பல்வேறு மனுக்களை வழங்கினார்கள். இந்த மனுக்கள் வட்டாட்சியர் முருகன் முன்னிலையில் வருவாய் துறையினர் பரிசீலனை செய்தனர்.
மருத்துவப் பரிசோதனை
போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் ஜமாபந்திக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
போளூா் வட்டாட்சியா்அலுவலகத்தில் 3-ஆம் நாள் வெள்ளிக்கிழமை ஜமாபந்தி ஆரணி கோட்டாட்சியா் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.
இதில், சந்தவாசல் உள்வட்டத்தைச் சோ்ந்த சந்தவாசல், படவேடு, கல்குப்பம், வாழியூா், அனந்தபுரம், குப்பம், காளமுத்திரம், களம்பூா், இலுப்பகுண், நாராயமமங்கலம், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் பங்கேற்று மனு அளித்தனா்.
அலுவலக வளாகத்தில் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் களம்பூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த முகாமை ஆரணி கோட்டாட்சியா் பாலசுப்பிரமணியம் திறந்து வைத்தார். இந்த மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.