சிறுமியை கடத்தி திருமணம்: போக்சோவில் வாலிபர் கைது
சிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்
திருவண்ணாமலை மாவட்ட கிரைம் செய்திகள்:
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள சேர்ப்பாப்பட்டு பொன்வயல் கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவர் மகன் சீதாபதி. டிரைவரான இவர், 17 வயது சிறுமியை அவரது பெற்றோருக்கு தெரியாமல் அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார். தற்போது அந்த சிறுமியும், அவரும் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை,
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தண்டராம்பட்டு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்துள்ளனர். அதன் போலீசார் சிறுமியை கடத்தி திருமணம் செய்த சீதாபதி மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் தேடி வருகின்றனர்.
ஆரணி:
ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் தனிப்படை போலீசார் திடீரென ஆய்வு மேற்கொண்டதில் கஞ்சா, புகையிலை, லாட்டரி சீட்டு விற்றதாக 9 பேர், சாராயம், மது விற்றதாக 5 பேர், சூதாடிய 2 பேர் என மொத்தம் 19 வழக்குகளில் 21 பேரை கைது செய்தனர்.
மேலும் கடந்த 4 மாதங்களில் ஆரணி உட்கோட்டத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 287 வழக்குகள் பதிவு செய்து, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சாராயம் விற்றவா் குண்டர் சட்டத்தில் கைது:
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா சித்தலப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் மணிகண்டன். இவர், சாராயம் விற்ற போது கையும், களவுமாக செய்யாறு மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் கலையரசி தலைமையிலான போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
மணிகண்டன் தொடர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபடுவதை தடுக்க குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அதற்கான நகலை வேலூர் ஜெயிலில் இருக்கும் மணிகண்டனிடம் போலீசார் வழங்கினர்.