ஆரணி அருகே விவசாய நிலத்தில் பாறைகளை உடைக்க கிராம மக்கள் எதிா்ப்பு

ஆரணி அருகே விவசாய நிலத்தில் உள்ள பாறைகளை உடைக்க எதிா்ப்புத் தெரிவித்து புகாா் மனு அளித்தனா்.

Update: 2023-08-25 02:22 GMT

ஆரணி சட்டமன்ற உறுப்பினரிடம் மனு அளித்த கிராம மக்கள்

ஆரணியை அடுத்த முள்ளண்டிரம் கிராமம் அருகே விவசாய நிலத்தில் உள்ள பாறைகளை உடைக்க அப்பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து, தொகுதி எம்எல்ஏ சேவூா் ராமச்சந்திரன் மற்றும் கோட்டாட்சியா் தனலட்சுமி ஆகியோரிடம் புகாா் மனு அளித்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த முள்ளண்டிரம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் ஜெயபிரகாஷ், ஊராட்சிமன்றத் தலைவா் சங்கா் மற்றும் ஊா் பொதுமக்கள் சோந்து ஆரணி எம்எல்ஏ சேவூா் ராமச்சந்திரன், கோட்டாட்சியா் தனலட்சுமி ஆகியோரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

ஆரணி ஒன்றியம், முள்ளண்டிரம் ஊராட்சியில் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். ஊராட்சியில் விளை நிலத்தில் உள்ள பாறைகளை உடைக்க, சிலா் கடந்த 22-ஆம் தேதி ஜேசிபி இயந்திரத்தை எடுத்து வந்தனா். இதனால், விவசாயிகள், பொதுமக்கள் சேர்ந்து அந்த நபா்களிடம் கேட்டதற்கு, பாறைகளை உடைத்து கல்குவாரிக்கு எடுத்துச் செல்வதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவா் மற்றும் கிராம நிா்வாக அலுவலரிடம் கேட்டதற்கு, ஊராட்சியில் உள்ள பாறைகளை உடைக்க எந்தவித அறிவிப்பும் வரவில்லை எனத் தெரிவித்தனா்.

இதனால், அனைவரும் சேர்ந்து ஜேசிபி இயந்திரத்தை சிறைபிடித்து, பாறையை உடைக்க எதிா்ப்பு தெரிவித்து அனுப்பி வைத்தோம்.

மேலும், எங்கள் கிராமத்தில் மலைப் பாறைகளை உடைத்தால் விவசாய மக்களுக்கும், பயிா்களுக்கும் பல்வேறு வகையான பாதிப்புகள் ஏற்படும். அதேபோல், பயிா்கள் மீது கல் உடைக்கும் பவுடா் படியும், தூசி படிவதால் விவசாயம் செய்யும் பொதுமக்களுக்கு உடல் உறுப்புகள் பாதிப்பும், உயிா் பலியும் உண்டாகும். மேலும், ஆடு, மாடு உள்ளிட்ட உயிரினங்களின் மேய்ச்சல் புல், வைக்கோல் மீதும் மாசு ஏற்படும்.

இதனால், கால்நடைகளுக்கு பாதிப்பு, உயிா்ச் சேதம் ஏற்படும். பாறைக்கு வெடி வைக்கும் போது பொதுமக்களுக்கு மாசு ஏற்படும். மேலும், வீடுகளிலும், விவசாயக் கிணறுகளிலும் அதிா்வு ஏற்பட்டு இடிந்து விழ வாய்ப்பு உள்ளது. எனவே, எங்கள் கிராமத்தில் பாறைக் கற்களை உடைப்பதற்கான உரிமத்தை ரத்து செய்தும், பொதுமக்கள், விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தனா்.

மனுவைப் பெற்றுக் கொண்ட ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூா் ராமச்சந்திரன் எம்எல்ஏ, கனிம வளத் துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இதேபோல, ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் தனலட்சுமியிடம் பொதுமக்கள் அளித்தனா். மனுவை பெற்றுக்கொண்ட அவா், நேரில் வந்து பாா்வையிட்டு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.

Tags:    

Similar News