ஆரணியில் கழிவுநீா் கால்வாயை தூா்வாராததைக் கண்டித்து சாலை மறியல்

ஆரணி அருந்ததிபாளையம் பகுதியில் கழிவுநீா் கால்வாய் தூா்வாரப்படாததைக் கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Update: 2023-09-05 12:01 GMT

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

ஆரணி அருந்ததிபாளையம் பகுதியில் கழிவுநீா் கால்வாய் தூா்வாரப்படாததைக் கண்டித்து, அந்தப் பகுதி மக்கள் ஆற்றுப்பாலம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆரணி காந்தி ரோடு பெரியார் சிலை அருகே உள்ள அருந்ததியர் பாளையம் நகராட்சியின் 4-வது வார்டு பகுதியாகும். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மிகவும் தாழ்வான பகுதியில் வசிக்கின்றனர்.

இந்தப் பகுதியில் கால்வாய் முறையாக தூா்வாரப்படாததுடன், ஏற்கெனவே கால்வாயில் தூா்வாரிய மண்ணும் அகற்றப்படவில்லையாம். அந்த கழிவுகள் கால்வாயில் மீண்டும் சேர்ந்துள்ளதால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. தற்போது அடிக்கடி மழை பெய்வதால் தண்ணீர் கால்வாயிலிருந்து வெளியேறி குடியிருப்புக்குள் புகுந்து விடுகிறது.

இதனால், இந்தப் பகுதியில் மிதமான மழை பெய்தாலும், கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி, பல்வேறு நோய்கள் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது

எனவே கால்வாயில் தூர்வாரிய கழிவுகளை அகற்றக்கோரியும் மீண்டும் தூர்வார கோரியும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காலை 8.30 மணி அளவில் பெரியார் சிலை அருகே நூற்றுக்கும் மேற்பட்டோா் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு வந்த ஆரணி நகர காவல் நிலைய ஆய்வாளா் (பொ) ராஜாங்கம், உதவி ஆய்வாளா்கள் மகேந்திரன், கிருஷ்ணமூா்த்தி மற்றும் போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, கூட்டத்தைக் கலைத்தனா்.

பின்னர் நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி சம்பவ இடத்தை பார்வையிட்டு உடனடியாக கால்வாயில் தூர் வாருவதற்கும், தூர்வாரிய கழிவுகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

இதனை ஏற்று மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். எனினும் மறியல் காரணமாக அங்கு 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் பள்ளி, கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவர்கள், அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய ஊழியர்கள், அன்றாட வேைலக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

Tags:    

Similar News