அளவுக்கு அதிகமாக குவிக்கப்பட்டிருந்த மணல் பறிமுதல்
ஆரணியில் அரிசி ஆலை அதிபர் மகன் அளவுக்கு அதிகமாக மணல் குவித்த 30 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது.;
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பஸ் நிலையம் அருகில் ஒரு அரிசி ஆலை அதிபரின் மகன் கட்டடம் கட்டி வருகிறார். அங்கு அளவுக்கு அதிகமாக மணல் குவித்திருப்பதாக திருவண்ணாமலை மாவட்ட கலெக்டருக்கு தகவல் கிடைத்தது. இதுபற்றி கலெக்டர், ஆரணி வருவாய் கோட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்தார்.
அவரது உத்தரவின்பேரில் ஆரணி டவுன் வருவாய் ஆய்வாளர், ஆரணி டவுன் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் பழைய பஸ் நிலையம் அருகே கட்டடப்பணி நடக்கும் இடத்திற்கு சென்று சோதனை செய்தபோது அங்கு மணல் குவிக்கப்பட்டு இருந்தது தெரிந்தது. இதனை தொடர்ந்து ஆரணி - வந்தவாசி நெடுஞ்சாலையில் உள்ள அரிசி ஆலைக்கு சென்று சோதனை செய்தனர். அங்கும் மணல் குவிக்கப்பட்டு இருந்தது.
அவர்கள் அளித்த தகவலின்பேரில் கோட்டாட்சியர் கவிதா, ஆரணி தாசில்தார் சுபாஷ் சந்தர், வேலப்பாடி கிராம நிர்வாக அலுவலர் இளவரசன் ஆகியோர் சம்பந்தப்பட்ட அரிசி ஆலைக்கு வந்தும், புதிய கட்டடம் கட்டும் இடத்துக்கு வந்தும் பார்வையிட்டனர்.
இரு இடங்களில் குவித்து வைத்திருந்த 30 யூனிட் மணலை பொதுப்பணித் துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.