ஆரணி ஏரியில் குப்பை கழிவுகள! பொதுமக்கள் சாலை மறியல்

ஆரணி ஏரியில் குப்பை கழிவுகள் கொட்டுவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

Update: 2024-05-23 02:45 GMT

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஏரியில் குப்பைக் கழிவுகளை கொட்டும் ஆரணி நகராட்சியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வேலப்பாடி ஊராட்சிக்குட்பட்ட சிவசக்தி நகரில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

அதே பகுதியில் சம்பந்தவாடி ஏரியில் ஆரணி நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை இந்த ஏரியில் நகராட்சி வாகனம் மூலம் குட்டி வருவதால் அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் , குடியிருப்பு பகுதியில் நிலத்தடி நீர் மாசு ஏற்படுவதாகவும் குடியிருப்பு வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் இது சம்பந்தமாக பலமுறை ஆரணி நகராட்சியில் பொதுமக்கள் புகார் மனு அளித்த நிலையில், நேற்று நகராட்சி வாகனம் மூலம் குப்பை கழிவுகள், நெகிழி கழிவுகள், உணவகங்களில் இருந்து வெளியேற்றப்படும் எஞ்சிய உணவுப் பொருட்கள், இறைச்சி கழிவுகளை நகராட்சி ஊழியர்கள் கொட்டியதால் துர்நாற்றம் வீசி வருவதாக கூறி சுமார் 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆரணி வந்தவாசி சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர் மேலும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பினார்கள்.

அப்போது சமரசம் செய்ய வந்த காவல்துறை அதிகாரிகளிடம் பேசிய பொதுமக்கள், தொடர்ந்து ஆரணி நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் எங்கள் பகுதிகளில் குப்பைகளை கொட்டி வருகிறது ஏற்கனவே இந்த சம்பவத்தை கண்டித்து சாலை மறியல் செய்த போதும் அதிகாரிகள் இனி உங்கள் பகுதியில் குப்பைகளை கொட்ட மாட்டோம் என கூறிவிட்டு சென்றனர். ஆனால் இப்போது தொடர்ந்து எங்கள் பகுதி ஏரியில் குப்பைகளை நகராட்சி நிர்வாகத்தினர் கொட்டிவிட்டு எரித்துவிட்டு செல்கின்றனர். இதனால் புகை மூட்டம் எழுந்து சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. மேலும் சுகாதார சீர்கேடும் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. நாங்கள் எவ்வாறு நீங்கள் கூறுவதை நம்புவது உங்கள் சமரசத்தை எவ்வாறு ஏற்றுக் கொள்வது என கேள்வி எழுப்பினர்.

இதற்கு காவல்துறையினர் இனி உங்கள் பகுதியில் குப்பைகளை கொட்ட விடாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம் சாலை மறியலை கைவிடுங்கள் என கேட்டுக்கொண்டனர். இதனை ஏற்று பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு களைந்து சென்றனர்.

Tags:    

Similar News