நெல் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ஆரணியில் நெல் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன் விவசாய சங்கத்தினர் 2024 வேளாண் பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ஒதுக்கப்பட்ட தொகை வேளாண் வளர்ச்சிக்கு எந்த வகையிலும் உதவாது, தேர்தல் வாக்குறுதியின்படி, நெல் கொள்முதல் விலையை உயர்த்தி ரூபாய் 2500 வழங்க வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் புருஷோத்தமன் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில் 2024 வேளாண் துறை மானிய கோரிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 86 கோடி தொகை வேளாண் வளர்ச்சிக்கு எந்த வகையிலும் உதவாது, கடந்த ஆண்டு நெல் குவிண்டாலுக்கு உயர்த்தி வழங்கிய ரூபாய் 117 மற்றும் மாநில அரசு ரூபாய் 30 என ஆக மொத்தம் குவிண்டாலுக்கு 2457 வழங்கப்படுகிறது.
ஆனால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக நெல் குவிண்டலுக்கு ரூபாய் 2500 வழங்கப்படும், தொடர்ந்து ஆண்டு தோறும் உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது வரை அந்த தொகை உயர்த்தி வழங்கப்படவில்லை. இதனால் சாகுபடி குறைந்து விவசாயிகள் மிகவும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் விவசாயிகள் இடம் இருந்து வியாபாரிகள் ரூபாய் ஆயிரம் முதல் 1300 வரை குறைந்த விலையில் வாங்கிய நெல் மூட்டைகள் தனியார் குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டு, பின்னர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகள் போல விற்பனை நடைபெறுவதை அரசு தடுக்க வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் அனைத்து இடங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து தனியார் வியாபாரிகளை கண்காணிக்க வேண்டும். வேளாண் துறை பட்ஜெட்டில் மூன்று சதவீதம் நிதி ஒதுக்கீட்டில் கிடைக்கும் மானிய தொகையை முறையாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.