100 நாள் வேலைத்திட்டத்தில் நேரத்தை மாற்றுவதா? கிராம மக்கள் சாலை மறியல்
காட்டுகாநல்லூர் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் நேரத்தை மாற்றுவதை கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் ஊரக பகுதிகளில் பல்வேறு பணிகள் நடக்கின்றன. இந்த பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் காலை 9 மணிக்கு வந்து மதியம் 3 மணிக்கு பின் வீடு திரும்புவதாக இருந்தது.
ஆனால் இப்போது 2 மணி நேரத்துக்கு முன்னதாகவே அதாவது காலை 7 மணிக்கே பணியில் ஆஜராக வேண்டும் என கூறப்படுகிறது. பெண் தொழிலாளர்கள் வீட்டு வேலையை முடித்துவிட்டு வருவதற்குள் நேரம் கடந்து விடுவதால் வருகைப் பதிவேட்டில் பெயர் பதிவு இயலவில்லை.
இந்த நிலையில் நேரம் மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்தும் முன்பு போலவே காலை 9 மணிக்கு துவங்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி திருவண்ணாமலை கண்ணமங்கலம் அருகே உள்ள காட்டுக்காநல்லூரில் தொழிலாளர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜா, சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் சமரசம் செய்தனர். இதனால் போராட்டத்தை தொழிலாளர்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.