ஆரணி வட்டாரத்தில் 3500 ஏக்கர் நெற்பயிர் சேதம்
தொடர் மழை காரணமாக ஆரணி வட்டாரத்தில் 3500 ஏக்கர் நெற்பயிர் சேதம். வேளாண்மை துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு;
வடகிழக்கு பருவமழை காரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கனமழையால் சம்பா பட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த நெல் , வாழை , மஞ்சள், காய்கறிகள் உட்பட பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.
மேலும் தொடர் மழையின் காரணமாக ஆரணி தாலுகாவை சேர்ந்த ஆதனூர், மட்டதாரி, புங்கம்பாடி, தச்சூர், பையூர், உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த 3500 ஏக்கர் உயர்ரக நெல் பயிர்கள் வெள்ளத்தில் முழுகி சேதமடைந்துள்ளது.
அதேபோல் கண்ணமங்கலம் பகுதியிலும் வெண்டை, கத்திரி, சேம்பு, மஞ்சள், வாழை உள்ளிட்ட பயிர்கள் 200 ஏக்கர் வரை மழையால் சேதம் அடைந்துள்ளது.
இதனால் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 25,000 வரை செலவழித்து அறுவடை செய்யும் நேரத்தில் பயிர் செய்த முதல் கூட எடுக்க முடியாமல் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆரணி தாலுகாவில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குனர் திருமலைசாமி மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் சேதமடைந்த பயிர்களை நேரில் பார்வையிட்டு கணக்கெடுப்பு செய்து வருகின்றனர்.
ஆரணி தாலுகாவில் மழையால் 3500 ஏக்கர் நெற்பயிர்கள் 200 ஏக்கர் தோட்டக்கலை பயிர்கள் என மொத்தம் 3700 ஏக்கர் பயிர்கள் சேதம் அடைந்து உள்ளது . மேலும் ஆரணி வட்டாரத்தில் மழை பயிர் சேதம் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட 4300 விவசாயிகளிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக வேளாண்மை அதிகாரிகள் தெரிவித்தனர்.