உடுமலைப்பேட்டை: முறைகேடாக கொடுக்கப்பட்ட குடிநீர் இணைப்பு துண்டிப்பு
உடுமலைப்பேட்டையில் முறைகேடாக கொடுக்கப்பட்ட குடிநீர் இணைப்புகளை அதிகாரிகள் துண்டித்தனர்.
உடுமலைப்பேட்டை அருகே உள்ள மடத்துக்குளம் ஒன்றியம் மெட்ராத்தி ஊராட்சியில் ராமேகவுண்டன்புதூரில் 200 க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்துக்கு திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் 1.94 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும். துங்காவி, உடையாம்பாளையம் ஆகிய கீழ்நிலை தொட்டி மூலம் இந்த கிராமத்திற்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களாக சரியாக குடிநீர் வழங்கவில்லை என பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் உடையார்பாளையம் பிரதான குழாயில் முறைகேடாக கொடுக்கப்பட்ட குடிநீர் இணைப்பு ஜேசிபி இயந்திரம் மூலம் துண்டிப்பு நடவடிக்கை அதிகாரிகள் மேற்கொண்டனர். அப்போது அங்கு திரண்ட பொதுமக்கள் இயந்திரத்தை சிறைப்பிடித்து போராட்டம் செய்தனர். தகவல் அறிந்த மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் சந்திர குமார், தாசில்தார் ஜலஜா உடுமலைப்பேட்டை டிஎஸ்பி மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் குடிநீர் வழங்க அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன் பேரில் போராட்டத்தை கைவிடப்பட்டது.