வேளாண் பொறியியல் துறை மூலம் உழவுப்பணி: விவசாயிகள் எதிர்பார்ப்பு
டீசல், உரங்களின் விலை உயர்வால், வேளாண் பொறியியல் துறையினர் சார்பில், விவசாய நிலங்களில், கோடை உழவு செய்து கொடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தின் பல இடங்களில், பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இச்சமயத்தில் விவசாயிகள் வாழை, மரவள்ளி, நிலக்கடலை, சின்ன வெங்காயம், காய்கறி உள்ளிட்ட பலவகை பயிர்களை சாகுபடி செய்வார்கள்.
இது குறித்து, உடுமலை பகுதி விவசாயிகள் கூறியதாவது: டிராக்டர், ரோட்டோவேட்டர் மூலம், விவசாய நிலங்களில் உழவுப்பணி மேற்கொள்வோம். தற்போது, டீசல் விலை உயர்வால், தனியார் மூலம் டிராக்ட்ர மூலம் உழவுப்பணி மேற்கொள்ள செலவு அதிகமாகிறது. டி.ஏ.பி., பொட்டாஷ், யூரியா உள்ளிட்ட அத்தியாவசிய இடுபொருட்களின் விலையும் அதிகரித்திருக்கிறது; ஆனால், விளைப்பொருட்களுக்கான விலை குறைவு.
இதனால், விவசாயம் மேற்கொள்வதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எந்த வகையில் செலவை குறைக்கலாம் என, வழிதேட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, வேளாண்மை பொறியில் துறை சார்பில், விவசாய நிலங்களில், டிராக்டர் மூலம் கோடை உழவு செய்வதற்கு மானியம் வழங்க வேண்டும். இதன்மூலம், விவசாயிகளின் பொருளாதார சுமை ஓரளவு குறையும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.