உடுமலை: மழையால் பாதித்த நெற்பயிர்கள் குறித்து வேளாண்துறை கணக்கெடுப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்று வட்டாரத்தில், மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் குறித்து வேளாண்மைத்துறை அலுவலர்கள் கணக்கெடுப்பு மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையின் பாசனவசதி மூலம் உடுமலை சுற்று வட்டாரத்தில் கல்லாபுரம், அமராவதி, எலையமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. நெல் அறுவடை தயாராக இருந்த நிலையில், சமீபத்தில் பெய்த மழையால், நெற்பயிர்கள் கீழே சாய்ந்து சேதமடைந்தது.
மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையின் அடிப்படையில், வேளாண்மை துணை இயக்குனர் வடிவேல், உதவி வேளாண்மை அலுவலர் அமல்ராஜ் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில், 33, சதவீதத்துக்கு மேல் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து வேளாண்மை அலுவலர்கள் மதிப்பீடு செய்தனர். 33, சதவீத்துக்கு மேல் பாதிப்பு இருந்தால் மட்டுமே நிவாரணம் கிடைக்கும் என்றும், அதற்கு கீழ் இருந்தால் நிவாரணம் கிடைக்காது. அதற்கு தகுந்தாற்போல் நெற்பயிர்கள் அறுவடை மேற்கொள்ள வேண்டும் எனவும், விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.