கேரளாவில் கொரோனா அதிகரிப்பு எதிரொலி; உடுமலை எல்லையில் தீவிர கண்காணிப்பு

கேரளாவில் கொரோனா அதிகரிப்பு எதிரொலி உடுமலை எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

Update: 2021-08-31 12:46 GMT

உடுமலை எல்லையில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதார துறையினர்.

கேரளா மாநிலம் மூணாறு, மறையூர், காந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மளிகை, காய்கறி மற்றும் அவசர மருத்துவ தேவை என பல்வேறு பணிகளுக்காக, அப்பகுதியை சேர்ந்த மக்கள் வாகனம் மூலம் உடுமலை உள்ளிட்ட நகரங்களுக்கு வந்து செல்கின்றனர்.

கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மாநில எல்லை கண்காணிப்பு தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டது. மூணாறு – உடுமலை வழித்தடத்தில் வரும் பைக், கார், ஜீப், ஆட்டோ என தினசரி 400-க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர்.

உடுமலை சின்னாறு ரோட்டில் ஒன்பதாறு வனத்துறை சோதனை சாவடியில் சுகாதார துறை சார்பில் முகாம் அமைக்கப்பட்டு, சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்று அல்லது தொற்று பாதிப்பில்லை என்ற மருத்துவ சான்று இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும், வாகனங்களுக்கு கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுகிறது. கொரோனா சான்று இல்லை என்றால், அவர்கள் திருப்பி அனுப்பி வைக்கின்றனர். இதேபோல், கேரளா மாநில வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

Tags:    

Similar News