தடுப்பூசி செலுத்தியதில் திருப்பூர் முதலிடம்: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
இந்தியா மற்றும் தமிழக எண்ணிக்கையை காட்டிலும் திருப்பூர் மாவட்டத்தில் கூடுதல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது;
இந்தியா மற்றும் தமிழக எண்ணிக்கையை காட்டிலும் திருப்பூர் மாவட்டத்தில் கூடுதல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றார் தமிழக சுகாதாரத்துறை மா.அமைச்சர் சுப்பிரமணியன்
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியமன், செய்திதுறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் முகாம்களில், 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி இலக்குடன் மெகா தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் 18 வயது பூர்த்தியானவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி 13 லட்சத்து 86 ஆயிரத்து 891 பேருக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசி 2 லட்சத்து 72 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இந்திய அளவில் தடுப்பூசி போடும் பணியை காட்டிலும் கூடுதலான தடுப்பூசிகள் திருப்பூர் மாவட்டத்தில் செலுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் 67 சதவீத முதல் தவணையும், 13 சதவீதம் 2 -ஆவது தவணையும் செலுத்தப்பட்டு உள்ளது. கடந்த வார நடந்த முகாமில் 28 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு செலுத்தி தமிழக அரசு சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் 56 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இந்தியா மற்றும் தமிழக எண்ணிக்கையை காட்டிலும் திருப்பூர் மாவட்டத்தில் கூடுதல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
38 மாவட்டங்களில் திருப்பூர் மாவட்டம் கூடுதல் தடுப்பூசிகளை போட்டுக்கொண்டு முதலிடம் வகிக்கிறது. தடுப்பூசியில் கூடுதலாக இருக்கும் மருந்தை சாதூர்யமாக செலுத்தியதில், திருப்பூர் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. தட்டுப்பாடு காரணமாக முதல் தவணை கோவாக்சின் எங்கும் செலுத்தவில்லை. தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களிடமும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். நிகழ்ச்சியில் எம்எல்ஏ- செல்வராஜ், கலெக்டர் வீனித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.