நூல் விலையை குறைக்கக்கோரி திருப்பூரில் பாஜக சார்பில் உண்ணாவிரதம்
நூல் விலையை குறைக்க கோரி திருப்பூரில் பாஜக சார்பில் இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.;
நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி, திருப்பூரில் பாஜக சார்பில் இன்று நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம்.
திருப்பூர் சுற்று வட்டாரத்தில் ஆயிரக்கணக்கான பனியன் நிறுவனங்கள் செயல்படுகிறது. கடந்தாண்டு நூல் விலை கடுமையாக உயர்ந்ததால் பனியன் உற்பத்தி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டது. பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு, டிசம்பர் மாதம் நூல் விலை ரூபாய் 10 குறைக்கப்பட்டது. நடப்பு மாத துவக்கத்தில், கிலோவுக்கு ரூ.30 உயர்த்தப்பட்டது. இதனால் தொழில்துறையினர் கவலையடைந்தனர். மேலும், நூல் விலையைக் கட்டுப்படுத்தக்கோரி, ஜனவரி 17,18 ம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.
இந்நிலையில், திருப்பூர் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக அரசை வலியுறுத்தி, திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில், இன்று மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. திருப்பூர் புஷ்பா தியேட்டர் அருகே நடந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு, பாஜக வடக்கு மாவட்டத் தலைவர் செந்தில்வேல் தலைமை வகித்தார். மாநில செயலாளர் மலர்கொடி, மாவட்ட பொதுச் செயலாளர்கள் தங்கராஜ், கதிர்வேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.