பல்லடம் வனம் அமைப்பு: அவினாசியில் புதிய கிளை துவக்கம்
பல்லடம் வனம் அமைப்பின் கிளை அவிநாசியில் துவங்க உள்ளது.;
பல்லடம் 'வனம்' இந்தியா பவுண்டேஷனின் கிளையை, அவினாசியில் துவக்குவதற்கான ஆலோசனைக் கூட்டம், அவினாசி ரோட்டரி அரங்கில் நடந்தது. அம்மையப்பன், வரவேற்று பேசினார்.
'வனம்' அமைப்பின் செயலாளர் சுந்தரராஜ் பேசியதாவது:
முன்னோர் விட்டு சென்ற வளத்தையும், வருங்கால சந்ததிக்கு நாம் விட்டு செல்ல வேண்டிய வளத்தையும், இயல்பு கெடாமல் திரும்பி கொடுக்க வேண்டும். அதற்கான முன்னெடுப்பு தான், வனம் அமைப்பின் செயல்பாடு. அத்திக்கடவு திட்டத்தின் கீழ், குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு, ஆறு மாதத்தில் தண்ணீர் வரும்.
அந்த நீர் தடையின்றி நீர்நிலைகளில் நிரம்ப குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளை சுத்தம் செய்து, துார்வாரி வைக்க வேண்டும். அதே போன்று மரக்கன்றுகளை அதிகளவில் நட வேண்டும். இந்த பணியை, 'வனம்' அமைப்பினர் மேற்கொள்ள வேண்டும். முதலில், சிறிய அளவிலான திட்டத்தை எடுத்து, அதை சிறப்புற, வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
அவினாசி 'வனம்' இந்தியா பவுண்டேஷன் என்ற பெயரில், அவிநாசி ஒன்றியத்தை உள்ளடக்கிய, 31 ஊராட்சி, திருப்பூர் ஒன்றியத்தை உள்ளடக்கிய, 10 ஊராட்சிகளில் இப்பணிகளை மேற்கொள்ள, கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.