பல்லடத்தில் கொட்டிக்கிடக்கு பிரச்னை: வேட்பாளர்கள் கவனம் செலுத்துவார்களா?

பல்லடம் நகராட்சி தேர்தலில் வெற்றி பெறும் கவுன்சிலர்களுக்கு, நகரை மேம்படுத்த வேண்டிய பல்வேறு பொறுப்புகள் உள்ளன.

Update: 2022-02-09 12:45 GMT

பைல் படம்.

தொழில், வேலைவாய்ப்பு காரணமாக, பல்லடத்தில், நாளுக்கு நாள் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. இருப்பினும், கட்டமைப்பு வசதிகளும் காலத்துக்கு ஏற்ப நடைபெறவில்லை. பல்லடம் நகராட்சி மக்களின் கோரிக்கைகள் நிறைவேறுவதற்கு, நகராட்சி தேர்தல் வாய்ப்பாக உள்ளது. சிறந்த மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்தால், அவர்களது வார்டு சிறக்கும்; நகராட்சியும் மேம்படும்.

குடிநீர் பிரச்னை:

மொத்தம் உள்ள, 18 வார்டுகளில், 38,800 வாக்காளர்கள் உள்ளனர். அத்திக்கடவு, பில்லுார் கூட்டுக் குடிநீர் திட்டங்களின் கீழ், நகர மக்களுக்கு தினசரி குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது;முறைகேடான குடிநீர் இணைப்பு, மோசமான குடிநீர் குழாய்கள் உள்ளிட்டவற்றால், தண்ணீர் திருட்டு, சேதம் உள்ளிட்டவை தொடர்கதையாக இருந்து வருகிறது. இக்காரணங்களால், கோடைக்காலங்களின்போது, தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதை தடுக்க, முறைகேடான குடிநீர் இணைப்புகளை கண்டறிந்து துண்டிப்பதுடன், சேதமடைந்த குடிநீர் குழாய்களை அகற்றி, தண்ணீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொசு தொல்லை:

நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் இருந்து செல்லும் கழிவுநீர் அனைத்தும், பச்சாபாளையம் குட்டை வழியாக ஒன்பதாம் பள்ளத்தை சென்றடைகிறது. மழைநீர் வடிகாலுக்காக, ஓடையில், 2 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட கால்வாய், கழிவுநீர் செல்வதற்கு மட்டுமே பயன்பட்டு வருகிறது. பச்சாபாளையத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீர் மூலம் நகரில் கொசுப்பண்ணை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு வருவதால், கழிவுநீரை சுத்திகரித்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்.

பயணிகளுக்கு வசதி இல்லை:

திருப்பூர், கோவை, திருச்சி, உடுமலை, பொள்ளாச்சி, தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு வந்து செல்லும் பயணிகளுக்கு பல்லடம் பஸ் ஸ்டாண்ட் மையப்பகுதியாக உள்ளது. இதன் காரணமாக, பஸ் ஸ்டாண்டில் தினசரி பல ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். பயணிகளின் பாதுகாப்புக்காக அவுட் போஸ்ட், ஏ.டி.எம்., உள்ளிட்ட வசதிகள் நீண்ட காலமாக கோரப்பட்டு வருகின்றன. இதேபோல், பயணிகளுக்கு சுகாதாரமான குடிநீர், கழிப்பிட வசதிகள் கிடையாது. வருவாய்க்கு மட்டுமே வழிதேடும் நகராட்சி நிர்வாகம், பயணிகள், பொதுமக்களின் நலன் கருதி திட்டங்களை செயல்படுத்துவது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

நெரிசல் தொடர்கதை:

தொழில், வியாபாரம், வணிகம் என, பல்லடம் வட்டாரத்துக்கு உட்பட பல ஆயிரம் மக்கள் கூடும் இடமாக என்.ஜி.ஆர்., ரோடு உள்ளது. நீண்ட காலமாக, பார்க்கிங், நடைபாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இப்பகுதியில் ஏற்படுத்தப்படாததால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட போதும், பார்க்கிங் வசதி இல்லாததால், நெரிசல் தொடர்கதையாகி உள்ளது. வியாபாரிகள், பொதுமக்களின் நலன் கருதி, நகராட்சிக்கு அதிக வருவாய் ஈட்டி தரும் என்.ஜி.ஆர்., ரோட்டின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை, துார்வாரப்படாத ஓடையால் சுகாதார சீர்கேடு, கட்டுக்குள் வராத நெகிழி பைகள் பயன்பாடு, அவ்வப்போது எரியாத தெரு விளக்குகள் என, பல்லடம் மக்களின் அடிப்படை தேவைகளின் பட்டியல் நீள்கிறது.நகர வளர்ச்சிக்கு இணையாக, அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட வில்லை என்பதே மக்களின் குற்றச்சாட்டு. புதிதாக பதவியேற்கும் நகர தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலர்களுக்கு அதிகப்படியான பொறுப்பு உள்ளது.  

Tags:    

Similar News