பல்லடம் பகுதியில் மாடுகளை தாக்கும் மடியம்மை நோய்
பல்லடத்தில் மாடுகளை, மடியம்மை நோய் தாக்கி வருவது, விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது.;
திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டாரத்தில், விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பு தொழிலும் பரவலாக நடந்து வருகிறது. விவசாயிகள், கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதல், மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவற்றுக்கு, அரசு கால்நடை மருந்தகங்களை நாடுகின்றனர். கடந்த சில தினங்களாக, மாடுகளை மடியம்மை நோய் தாக்குகிறது.
விவசாயிகள் சிலர் கூறுகையில், 'மடியும்மை நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகள், கடும் வலிக்கு ஆளாகின்றன. பாதிக்கப்பட்ட கால்நடைகளில் பால் கறக்காமல் இருந்தால் அது மேலும் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். ஆனால், வலி காரணமாக, மாடுகள் பால் கறக்க விடுவதில்லை. பல்வேறு சிகிச்சைகள் வழங்கியும், நோய் குணமாகாமல் உள்ளது. மேலும், மடியம்மை நோய் மாடுகள் மூலம் தற்போது மனிதர்களுக்கும் பரவி வருவதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. நோய் பரவலை கட்டுப்படுத்த, பரவலாக சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும்' என்றனர்.
திருப்பூர் மாவட்ட கால்நடை உதவி இயக்குனர் பரிமள ராஜ்குமார் கூறுகையில், ''மடியம்மை நோய் என்பது கூட்டமாக ஆடு வளர்ப்பவர்களை சிறிது பாதிக்கும். இதுவரை மனிதர்களுக்கு பரவியதாக எங்கும் இல்லை. இருந்தும், அதுபோல் பரவும் தன்மை ஏதேனும் உள்ளதா என்பதை ஆராய வேண்டும். இதற்கு தடுப்பூசி எதுவும் கிடையாது. வழக்கமான சிகிச்சையிலேயே குணமாகிவிடும். பால் கறப்பவர்களுக்கும் இந்நோய் பாதிப்பு லேசாக ஏற்படுகிறது. ஆனால் பெரிய அளவில் பரவியதாக இல்லை,'' என்றார்.